சென்னை சேப்பாக்கத்தில் அரசு விருந்தினர் இல்ல புதிய கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


சென்னை சேப்பாக்கத்தில் அரசு விருந்தினர் இல்ல புதிய கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 21 April 2018 3:00 AM IST (Updated: 21 April 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சேப்பாக்கத்தில் புதிய அரசு விருந்தினர் இல்ல கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை, 

சென்னை சேப்பாக்கத்தில் புதிய அரசு விருந்தினர் இல்ல கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வெளிமாநிலங்களில் இருந்தும், மத்திய அரசில் இருந்தும் வரும் அரசு விருந்தினர்களுக்கு சென்னை சேப்பாக்கத்திலுள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் போதுமான இடவசதி இல்லை. எனவே சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், 40 அறைகள் கொண்ட புதிய அரசு விருந்தினர் இல்லத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 28.8.2014 அன்று ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிதாக கட்டப்பட உள்ள விருந்தினர் மாளிகை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, அதன் மாதிரி வடிவமைப்பை பார்வையிட்டார்.

ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 60 ஆயிரத்து 364 சதுரடி பரப்பளவில் 25 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு விருந்தினர் இல்ல கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்துவைத்தார்.

இந்த புதிய அரசு விருந்தினர் இல்லத்தின் கீழ்தளம் மற்றும் முதல் தளத்தில், குளிர்சாதன வசதியுடன் தலா 16 அறைகள் வீதம் 32 அறைகள், இரண்டாம் தளத்தில் 8 அறைகள், கீழ்தளத்தில் 2 கூட்ட அரங்குகள், முதல் தளத்தில் 4 ஆலோசனை அரங்குகள், இரண்டாம் தளத்தில் சூரிய மின்சக்தி வசதி கொண்ட சமையல் அறை, உணவு பாதுகாப்பு அறை, 2 உணவு அறைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இக்கட்டிடத்தில் மூன்று மின் தூக்கிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ஓட்டுனர்களுக்கான ஓய்வு அறைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், தடையில்லா மின்சார வசதி, அழகிய புல்தரை போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுத்துறை செயலாளர் பி.செந்தில்குமார், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், பொதுத்துறை (மரபு) துணை செயலாளர் த.மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story