தனக்கு பிறக்கவில்லை என்ற சந்தேகத்தில் தாயின் கண் முன்னே பெண் குழந்தையை அடித்துக்கொன்ற தந்தை


தனக்கு பிறக்கவில்லை என்ற சந்தேகத்தில் தாயின் கண் முன்னே பெண் குழந்தையை அடித்துக்கொன்ற தந்தை
x
தினத்தந்தி 21 April 2018 3:45 AM IST (Updated: 21 April 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

தாயின் கண்முன்னே 1½ மாத பெண் குழந்தையை தரையில் அடித்து தந்தை கொலை செய்தார்.

விருத்தாசலம், 

தாயின் கண்முன்னே 1½ மாத பெண் குழந்தையை தரையில் அடித்து தந்தை கொலை செய்தார். தனக்கு பிறக்கவில்லை என்ற சந்தேகத்தில் குழந்தையை தீர்த்துக்கட்டியதாக போலீசில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள திருவரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்மணி என்கிற கண்மணிராஜா(வயது 32). தொழிலாளி. இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி கிராமத்தை சேர்ந்த ஜமுனாராணிக்கும்(26) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு ஹகின்(5) என்ற மகனும், சஞ்சனா(2) என்ற மகளும் உள்ளனர். மீண்டும் கர்ப்பமான ஜமுனாராணிக்கு கடந்த 1½ மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. மற்ற 2 குழந்தைகளை விட அந்த பெண் குழந்தை அழகாக இருந்தது. இதனால் ஜமுனாராணியின் நடத்தையில் கண்மணிராஜா சந்தேகப்பட்டார். தினமும் மது குடித்து விட்டு ஜமுனாராணியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய கண்மணிராஜா, 3-வது குழந்தை யாருக்கு பிறந்தது எனக்கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் ஜமுனாராணி கையில் வைத்திருந்த 1½ மாத பெண் குழந்தையை பறித்து திடீரென தரையில் ஓங்கி அடித்தார். இதில் அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

தன் கண்முன்னே குழந்தையை அடித்து கொலை செய்ததை பார்த்து ஜமுனாராணி கதறி அழுதார். பின்னர் அந்த குழந்தையை ஒரு சேலையில் சுற்றி வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் குழிதோண்டி புதைத்தார். இதையடுத்து நேற்று காலை ஜமுனாராணி, கம்மாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் திருவரப்பூர் விரைந்து சென்று அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த கண்மணிராஜாவை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், குழந்தையை கொன்று புதைத்த இடத்தை காண்பித்தார். அந்த இடத்தை போலீசார் தோண்டி, குழந்தையின் உடலை கைப்பற்றினர். பின்னர் கண்மணிராஜாவை போலீசார் கைது செய்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

திருமணமானதில் இருந்து ஜமுனாராணி அவரது தாய் வீட்டிற்கு சென்றால் வெகுநாட்களுக்கு பிறகுதான் திரும்பி வருவார். இதனால் எனக்கு அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

இதற்கிடையில் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு பிறந்த பெண் குழந்தை சிகப்பாக இருந்ததாலும், என்னை போன்றோ, எனது மனைவியை போன்றோ இல்லாததாலும் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்றும், அந்த குழந்தையை உன் பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு வருமாறும் கூறினேன்.

ஆனால் அதையும் மீறி அந்த குழந்தையை எனது வீட்டிற்கு அழைத்து வந்தார். அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் அதிகளவு கோபம் வரும். இதனால் குழந்தையை தரையில் ஓங்கி அடித்து கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story