கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி விலக வேண்டும் வைகோ வலியுறுத்தல்
கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி விலக வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். #Vaiko
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்ற 6 மாதங்களில் பல்வேறு சர்ச்சைகளின் நாயகராக காட்சி தருகிறார்.
வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை, அதிலும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டோரைத் தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக நியமித்து வருகின்றார். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசின் முதல்-அமைச்சரை விட தாம் ஒரு சூப்பர் முதல்வர் என்பது போன்று கவர்னர் புரோகித் தம்மைக் காட்டிக்கொண்டு வருவது கடுமையான கண்டனத்திற்கு உரியது.
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீது சந்தேகத்தின் நிழல் படிந்துள்ள நிலையில், அவசர அவசரமாக கவர்னர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டிய தேவை என்ன?
அங்கே அவர் நடந்துகொண்ட முறையை பெண் செய்தியாளர் ஒருவர் கண்டனம் செய்து இருக்கின்றார். ஏற்கனவே தஞ்சையில் நடந்த ஒரு விழாவில் கவர்னர் பங்கேற்றபோதும் இதுபோன்று நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தை, ஒரு நபர் விசாரணை ஆணையமாக கவர்னர் நியமித்தது சட்டமீறல். அதற்கான அதிகாரம் கவர்னருக்கு கிடையாது. அவரே புகார் வளையத்திற்குள் சிக்கி இருக்கும்போது, அவர் நியமித்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தால் எந்த உண்மையும் வெளிவராது. உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கவே இந்த ஏற்பாடு. எனவே, இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும். நேர்மையான விசாரணை நடத்தி, யாருக்காக அவர் இவ்வாறு செயல்பட்டார் என்ற உண்மையை வெளிக்கொணர வேண்டும். அந்த நபர்களைக் கைது செய்து குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும்.
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசாங்கத்தை மதிக்காமலும், தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்ற, பல்வேறு புகார்களுக்கு ஆளாகி இருக் கின்ற பன்வாரிலால் புரோகித், தமிழக கவர்னர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story