நிர்மலாதேவியுடன் தொடர்புடைய பல்கலைக்கழக அதிகாரிகள் பட்டியல் தயார்? சந்தானம் 3-வது நாளாக விசாரணை
பேராசிரியை நிர்மலாதேவியுடன் தொடர்புடைய பல்கலைக்கழக அதிகாரிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது. விசாரணை அதிகாரி 3 வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார். #NirmalaDevi
விருதுநகர்
மாணவிகளை தவறாக வழி நடத்திய விவகாரம் பற்றி விருதுநகரில் நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி போலீஸ் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து நிர்மலாதேவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
நிர்மலா தேவி விவகார விசாரணையில், மதுரை காமராஜர் பல்கலைக்கலைக்கழக அதிகாரிகள், கவர்னர் மாளிகையில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பை விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நிர்மலா தேவி விவகாரம் குறித்து காவல் துறையின் சி.பி.சி.ஐ.டி பிரிவும், ஆளுநர் நியமித்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கவர்னர் நியமித்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் 3-வது நாளாக நிர்மலாதேவி விவகாரத்தை விசாரித்து வருகிறார்.
பல்கலைக்கழக பேராசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்) சந்தானத்திடம் புகார் மனு அளிக்க திட்டமிட்டுள்ளது. துணை வேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதில் இருந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு மற்றும் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக மனு அளிக்கிறார்கள்.
நிர்மலாதேவி விவகாரததில் பேராசிரியர் மட்டத்தில் உள்ள 3 பேருடன் இந்த சம்பவத்தை முடிக்க சூழ்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்காக நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்திருக்க வாய்ப்பு இல்லை.
எனவே இதில் தொடர்புடைய உயர்மட்டத்தில் உள்ள அதிகாரிகள்
அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து உண்மையை பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதுதான் அனைத்து
பேராசிரியர்களின் விருப்பம். இது தொடர்பாக சந்தானத்திடம் அனைத்து பேராசிரியர்களும் கோரிக்கை மனுவை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
விசாரணைக் குழுவினர் நிர்மலா தேவியின் பின்னணி குறித்து மட்டும் ஆராயாமல், பல்வேறு வகையில் விசாரணை செய்ய வேண்டும்" என்கின்றனர். மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர்கள் தவிர, விசாரைண கமிஷன் கவனிக்க வேண்டிய விஷயங்களையும் பட்டியலிட்டனர்.
குற்றவியல் விசாரணைக்கு இடையூறு இல்லாத வகையில் மற்றும் குற்றவியல் வழக்கைப் பாதிக்கக்கூடிய எந்தப் பரிந்துரைகளையும் சந்தானம் கமிஷன் வழங்கக்கூடாது. நிர்மலாதேவிக்கு பதவி ஆசை காட்டியே தங்கள் தேவையை நிறைவேற்றப் பல்கலைக்கழக அதிகாரிகள் முயன்றதாகத் தெரியவருவதால், பல்கலைக்கழகம் தரும் தன்னிலை விளக்கம் எதையும் சந்தானம் குழு ஏற்றுக்கொள்ளக் கூடாது.
கடந்த ஓராண்டில் நிர்மலாதேவி எத்தனை முறை பல்கலைக்கழக வேண்டுதலின் பேரில் பல்கலைக்கழக நிகழ்ச்சி மற்றும் அரசியல் நிகழ்ச்சிக்கு மாணவிகளை அழைத்து வந்தார் என்பதையும், மாணவிகள் யாருக்காக எந்தக் காரணத்துக்காக தேவைப்பட்டனர் என்பதையும் அவரிடம் விசாரிக்க வேண்டும்.
நிர்மலாதேவி பின்னணியில் தொடர்புடைய பல்கலைக்கழக அதிகாரிகளை குற்றவியல் வழக்கு முடியும் வரை இடைக்கால பணிநீக்கம் செய்யப் பரிந்துரை செய்ய வேண்டும்.
உயர்கல்விதுறை மற்றும் ஆளுநர் அலுவலகத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தொடர்புடைய எத்தனை ஊழல் புகார்கள் நிலுவையில் உள்ளது என்பதையும் விசாரணையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தவறு செய்த அதிகாரிகளுக்கும் கவர்னர் மாளிகை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் இடையே உள்ள தொடர்பை விசாரிக்க வேண்டும்.
பல்கலைக்கழகங்களின் நடைமுறை விதிகளில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கத் தேவையான விதிமுறை மாற்றம் மற்றும் விதிமுறைகள் உருவாக்கம் குறித்து, குழு பரிந்துரைகளை வழங்க வேண்டும்.
தன்னாட்சி பெற்ற கல்லூரியாக இருந்தாலும் கூடுதல் மாணவர் சேர்க்கை, கூடுதல் பாடப்பிரிவுகளை தொடங்குதல், மாணவர்கள் சான்றிதழ் மற்றும் யூ.ஜி.சி நிதி உதவிகளைப் பெறுதல் என, கல்லூரி அனைத்துச் செயல்பாடுகளுக்கும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளை நம்பியிருப்பதால், கல்லூரியில் இதுபோன்ற குற்றங்களுக்கு கல்லூரி நிர்வாகம் உடன்பட வேண்டியிருக்கிறது. இதனை வரைமுறைப்படுத்த வேண்டும்.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் இடையேயான பணிவிதிகள் வெளிப்படையான முறையில் அமைய, விதிமுறைகளை உருவாக்க வேண்டிய அவசியத்தை விசாரணை ஆணையம் மேற்கொள்ள வேண்டும். பணிநியமனங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் லஞ்சம் இல்லாத நிலையை உருவாக்கி இது போன்று நிகழ்வை நடைபெறுவதைத் தடுக்க ஆலோசனை வழங்க வேண்டும்.
நிர்மலா தேவி தனது ஆடியோ பேச்சில் தொலைநிலைக்கல்வி விடைத்தாள் திருத்தும் பணியையும், தொலைநிலைக்கல்வி பாடப்புத்தகங்களை தயாரிக்கும் பணி குறித்தும் பேசுகிறார். இது பணம் கொழிக்கும் பிரிவுகளாக இருக்கின்றன. இந்தப் பிரிவில் தனியார் கல்லூரியைச் சேர்ந்தவர்களுக்கு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். இதனையும் ஒரு வரைமுறைக்குள் கொண்டு வர வேண்டும்.
தொலைநிலைக்கல்வியில் நியமிக்கப்படுபவர்கள் குறுக்குவழிகளில் பதவி பெறுபவர்களாக இருக்கின்றனர். இந்த நியமனம் குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பிரிவுகளில் பணி நியமனத்துக்கும் விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும்" என்கின்றனர்.
Related Tags :
Next Story