பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின: வீட்டிற்கு சீல் வைப்பு
பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. #NirmalaDevi #Professor
சென்னை,
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றச்சாட்டின் பேரில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு அருப்புக்கோட்டை போலீசிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நிர்மலாதேவியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி முடிவு செய்தார்.
இதற்கு அனுமதி கோரி சாத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று சாத்தூர் கோர்ட்டில் நடைபெற்றது. மாஜிஸ்திரேட்டு நிர்மலாதேவியை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.
நிர்மலாதேவியை துன்புறுத்தக்கூடாது என்றும், 25-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் அவர் உத்தரவிட்டார். அவருக்கு தேவையான உணவு, உடை வழங்கவும் உத்தரவிட்டார்.
இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 8 மணி நேரமாக சோதனை நடத்தினர். சோதனை நடைபெற்ற நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, வீட்டிற்கு சிபிசிஐடி போலீசார் சீல் வைத்தனர். கணினி, ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story