கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய தேர்தல் தேதி அறிவிப்பு


கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய தேர்தல் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 22 April 2018 5:15 AM IST (Updated: 22 April 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு ஆணை வழங்கியதை தொடர்ந்து தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாநில தேர்தல் அலுவலர், அனைத்து செயற்பதிவாளர்கள், மாநில தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு ஆணையத்தால் தேர்தல் திட்டம் வழங்கப்பட்டது. அதன்படி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை தேர்தலுக்கு தடை விதித்தது. தற்போது சுப்ரீம் கோர்ட்டு அத்தடையை நீக்கி தேர்தலை தொடர்ந்து நடத்தலாம் என்றும் முடிவுகள் வெளியிடக்கூடாது என்றும் ஆணை வழங்கி உள்ளது.

அதன் அடிப்படையில் முதல்கட்டம் நிலை 2, 3 மற்றும் 4 ஆகியவற்றில் தேர்தல் நடத்த வேண்டிய சங்கங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடரப்படுகின்றன. மாற்றியமைக்கப்பட்ட தேதிகள் இணைப்பு 1 முதல் 3-ல் கண்டுள்ளபடி வழங்கப்படுகின்றன.

மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஏற்கனவே அவர்களால் தேர்தல் அறிவிப்பு வழங்கப்பட்டு, அறிவிப்புகள் நிறுத்தப்பட்டிருந்த சங்கங்களுக்கு தற்போது தேர்தல் ஆணையத்தால் மாற்றம் செய்யப்பட்ட தேதிகள் படி உரிய தேர்தல் அறிவிப்பினை வெளியிட மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு ஆணையத்தால் அதிகாரம் அளிக்கப்படுகிறது. இதற்கான உரிய அறிவிப்பை வழங்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

நிலை 3-ல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்களுக்கு நிலை 4-ல் பணி ஒதுக்கீடு செய்ய கூடாது. நிலை 4-ல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்களுக்கு நிலை 3-ல் பணி ஒதுக்கீடு செய்ய கூடாது. முதல்நிலையில் அனைத்து நடவடிக்கைகளும் கடந்த 9-ந்தேதியோடு முடிவு பெற்றுவிட்டன. ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஆணைகள் அவற்றுக்கு பொருந்தாது.

2-ம் நிலையில் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் மாற்றியமைக்கப்பட்ட தேதியான வரும் 27-ந்தேதியில் நடைபெற இருந்தாலும் அதன் முடிவுகளை தேர்தல் அலுவலர்கள் அறிவிக்கக்கூடாது. 3 மற்றும் 4-ம் நிலையில் கூறியபடி தேர்தல் நடவடிக்கைகளில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யலாம். தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய இடங்களுக்கு சமமாகவோ, குறைவாகவோ வேட்பாளர்கள் எண்ணிக்கை இருந்தாலும், அவர்களை தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்க கூடாது.

தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய இடங்களுக்கு அதிகமாக வேட்பாளர்கள் எண்ணிக்கை இருந்தால் அறிவிப்பின்படி குறிப்பிட்ட நாளில் வாக்குப்பதிவும் நடத்த வேண்டும். 3 மற்றும் 4 நிலைகள் பொறுத்தவரை உறுப்பினர் தேர்தல் முடிவு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வரும் வரை அறிவிக்கப்போவதில்லை.

இதனால் தலைவர், துணைத்தலைவர் தேர்தலுக்கான கூட்ட அறிவிப்பு மற்றும் அதனை தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டு ஆணையை உரிய கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

நிலை-2 க்கான தேர்தல் தொடர்பான தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலுக்கான கூட்ட அறிவிப்பு வரும் 23-ந்தேதி வெளியிடப்படுகிறது. வரும் 27-ந்தேதி காலை 10 மணிக்கு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடத்தப்படுகிறது.

நிலை 3-க்கான தேர்தல் திட்டத்தில் வரும் 23-ந்தேதி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு செல்லத்தக்க வேட்பு மனுக்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. வரும் 24-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம்.

வரும் 24-ந்தேதி மாலை 5 மணிக்கு போட்டியிடும் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து வரும் 27-ந்தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

நிலை-4 க்கான தேர்தல் திட்டத்தில், வாக்காளர் பட்டியலுக்கு உரிமை அல்லது மறுப்பு தெரிவிப்பது, வாக்காளர் பட்டியல் அலுவலரின் முடிவுகள் வரும் 25-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்கு சங்க அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும்.

அதேபோல் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 26-ந்தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. வேட்பு மனுக்களை வரும் 30-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம்.

தொடர்ந்து வரும் மே 2-ந்தேதி பகல் 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வேட்பு மனு பரிசீலனையும், மாலை 5 மணிக்கு செல்லத்தக்க வேட்பு மனுக்கள் பட்டியலும் வெளியிடப்படுகிறது. வரும் 3-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். அன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து 7-ந்தேதி காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story