விபத்தில் கால்களை இழந்த லாரி கிளனருக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு ஐகோர்ட்டு உத்தரவு
விபத்தில் இரு கால்களையும் இழந்த லாரி கிளனருக்கு, ரூ.45 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
விபத்தில் இரு கால்களையும் இழந்த லாரி கிளனருக்கு, ரூ.45 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் ஆர்.நாகராஜ் (வயது 32). லாரி கிளனராக வேலை செய்தார். கடந்த 2009-ம் ஆண்டு ஓசூரில் இருந்து பெங்களூவுருக்கு லாரியில் சென்றார். லாரியை டிரைவர் வேகமாக ஓட்டியதால், முன்னே சென்று கொண்டிருந்த கர்நாடக மாநில அரசு பஸ் மீது லாரி மோதியது. பின்னர், மோட்டார் சைக்கிளில் மோதி, தமிழக அரசு பஸ் மீது மோதியது.
இதில் நாகராஜின் இரு கால்களிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டு, பின்னர் ஆஸ்பத்திரியில் அவரது 2 கால்களும் துண்டிக்கப்பட்டன.
இதையடுத்து மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில், இழப்பீடு கேட்டு நாகராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், அவருக்கு ரூ.20 லட்சத்து 93 ஆயிரத்து 500 இழப்பீடு வழங்க, விபத்துக்குள்ளான வாகனம் காப்பீடு செய்திருந்த, காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது நீதிபதிகள், கால்களை இழந்த நாகராஜ், சக்கரநாற்காலியில் கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதிகள், பின்னர் இழப்பீட்டு தொகையை உயர்த்துவதாக கூறினர்.
‘இந்த இழப்பீட்டை தொகையை நல்லவிதமாக செலவு செய்யவேண்டும்’ என்று நாகராஜூக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்கள். அதற்கு பதிலளித்த நாகராஜ், எனக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்களது திருமணத்துக்கு இந்த தொகையை பயன்படுத்துவேன் என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இரு கால்களையும் இழந்துள்ள நாகராஜ், கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட, பிறருடைய உதவி இல்லாமல் செல்ல முடியாத நிலையில் உள்ளார். அவர் வாழ்நாள் முழுவதும், அவருக்கு உதவியாளர் தேவை. எனவே, உதவியாளராக இருக்கும் அவரது மனைவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குகிறோம்.
கணவன் கால்களை இழந்ததால், அந்த பெண்ணின் இல்லற வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குகிறோம். இவற்றை எல்லாம் சேர்த்து மொத்தத்தில் இழப்பீடு தொகையை ரூ.45 லட்சமாக இழப்பீடு உயர்த்துகிறோம். இந்த தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் உடனடியாக வழங்கவேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story