கச்சா எண்ணெய் கசிவு: பாதிக்கப்பட்ட 1 லட்சம் மீனவர்களுக்கு ரூ.131 கோடி நிவாரணம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
சென்னை அருகே சரக்கு கப்பல்கள் மோதியதால் கடலில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 1 லட்சம் மீனவர்களுக்கு ரூ.131 கோடி நிவாரணத் தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சென்னை,
எண்ணூர் காமராஜர் துறைமுக கடற்பகுதியில் எம்.டி.பி.டபிள்யூ. மேப்பிள் சரக்கு கப்பல் மற்றும் டான் காஞ்சீபுரம் என்ற எண்ணெய் கப்பல் ஆகிய இரண்டு கப்பல்கள் 28.1.2017 அன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதன் காரணமாக கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட கடற்கரை மற்றும் அதனைச் சார்ந்த கடல் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் மீனவர்கள், மீனவ மகளிர், மீன் விற்பனை செய்பவர்கள், மீன்பிடிப்பு சார்ந்த பிற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.
அந்த மாவட்டங்களைச் சார்ந்த மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் 15 கோடி ரூபாயை இடைக்கால நிவாரணத் தொகையாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 6.3.2017 அன்று வழங்கினார்.
மேலும், கப்பல் நிறுவனங்களிடம் இருந்து உரிய நிவாரணத் தொகை பெற, பாதிக்கப்பட்ட மீனவ மக்களிடம் இருந்து மீன்வளத்துறை வாயிலாக நிவாரணக் கோரிக்கைக்கான மனுக்கள் பெறப்பட்டு, ஒருங்கிணைந்த அறிக்கை அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 448 மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க 131 கோடி ரூபாயும், மறுசீரமைப்பு பணிகளுக்காக 10 கோடி ரூபாயும், என மொத்தம் 141 கோடி ரூபாய் நிவாரணத் தொகையாக கப்பல் நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை மற்றும் சென்னை ஐகோர்ட்டின் ஆணைப்படி பெறப்பட்டது.
கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவ மக்கள் தொழில் சார்ந்த முறையில் ஏழு வகையாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வகையினருக்கும் நிவாரணத் தொகையின் அளவு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 35 ஆயிரம் ரூபாயும், எந்திர மயமாக்கப்பட்ட நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாயும், எந்திர மயமாக்கப்படாத நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாயும், மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாயும், மீன்பிடி உபதொழிலில் ஈடுபடும் மீனவ மகளிருக்கும், மீன் விற்பனை செய்பவர்களுக்கும், மீன்பிடித்தல் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாயும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிடும் அடையாளமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்களுக்கு (மாவட்டத்துக்கு 7 பேர் வீதம்) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணத் தொகைக்கான காசோலைகளை நேற்று வழங்கினார்.
Related Tags :
Next Story