தூக்கு தண்டனை அறிவிப்புக்கு பிறகும் சென்னையில் கோயிலுக்குள் சிறுமி பாலியல் வன்கொடுமை பூசாரி கைது
தூக்கு தண்டனை அறிவிப்புக்கு பிறகும் அடங்காத காம பிசாசுகள் 10 பாலியல் பலாத்காரங்கள் ; சென்னையில் கோயிலுக்குள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை
சென்னையில் வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அவர்களின் 3 வயது பேத்தி தாத்தா பாட்டியைக் காண வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் அருகில் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருபவர் உதயகுமார்.
குழந்தையை கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார் அவரது பாட்டி . சாமி கும்பிட்டுவிட்டு கிளம்பும்போது, குழந்தை இங்கேயே விளையாடட்டும், நான் பாத்துக்கொள்கிறேன் என்று பூசாரி கூறியுள்ளார். அதை நம்பிய பாட்டியும் குழந்தையை விட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பி சென்றுள்ளார். சில நிமிடங்களில் பூசாரி தன் கோர குணத்தை காட்டியுள்ளான்.
சிறு குழந்தை என்றும் பாராமல் அதனை கோயிலின் பின்புறம் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். சிறிது நேரத்திற்கெல்லாம் குழந்தை அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து, நடந்ததை ஒழுங்காக சொல்ல கூட தெரியாமல் கதறியது.
என்னவாயிற்று என தெரியாமல் விழித்துள்ளார் பாட்டி. பின்னர் குழந்தையை பரிசோதனை செய்து பார்த்தபோது, வன்கொடுமை செய்யப்பட்டுள்ளாள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து பாட்டி பதறினார். அதற்குள் அக்கம்பக்கத்திலும் ஆட்கள் கூடிவிடவே, ஆத்திரடைந்த அனைவரும் சேர்ந்து பூசாரியை அடித்து துவைத்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் மகளிர் காவல்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பூசாரி உதயகுமாரை போஸ்கோ சட்டப்பிரிவின்கீழ் கைது செய்தனர்.
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் போஸ்கோ சட்டத்தில் செய்யப்பட்ட அவசர சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் சமீபத்தில்தான் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜனாதிபதி ஒப்புதல் அளித்த தினமான நேற்று மட்டும் நாடு முழுவதும் 10 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 4 சம்பவம் நிகழ்ந்துள்ளது. உன்னாவ், ராம்பூர், அம்ரோகா, முஷாபர்நகர் ஆகிய பகுதிகளில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் கட்டாக் மற்றும் கேந்த்புரா பகுதியில் 2 சிறுமிகளும், ஆந்திர மாநிலம் நெல்வாயில் ஒரு சிறுமியும், அரியானவில் 14 வயது சிறுமியும், பலாத்காரம் செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டிலும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. பீகாரில் சிறுமி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story