காவிரி மேலாண்மை வாரியம் : தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் மனித சங்கிலி போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டன. #CauveryProtest #CauveryManagementBoard #DMK
சென்னை
காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்காததைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் உள்ளிட்டவைகள் நடத்தியது. இந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டன.
சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடக்கிறது. சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் ஜெ.அன்பழகன் தலைமையில் அண்ணாசாலை முதல் தேனாம்பேட்டை வரையிலும், சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சேகர்பாபு தலைமையில் பெரம்பூர் சர்ச் அருகிலிருந்து பிராட்வே வரையிலும், சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் மாதவரம் சுதர்சனம் தலைமையில் மூலக்கடை முதல் ஸ்டான்லி வரைக்கும் சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் மா.சுப்ரமணியன் தலைமையில் சைதாப்பேட்டையிலிருந்து மீனம்பாக்கம் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள், கட்சிகளின் நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
வேலூரில் துரைமுருகன் தலைமையிலும், தஞ்சையில் வைகோ தலைமையிலும் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. மனித சங்கிலி போராட்டம் சேலம், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா சாலையில் கனிமொழி எம்.பி. தலைமையில் மனித சங்கிலி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தயாநிதி மாறன், அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய எம்.பி. கனிமொழி, கர்நாடக தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய அரசு தமிழர்களை பகடைக்காயாக மாற்றியுள்ளது என்று குற்றம் சாட்டினார். காவிரி மேலாண்மை வாரியத்துக்காக நாம் தொடர்ந்து போராட வேண்டும். இந்த அரசாங்கம் நமக்கு எதுவும் செய்யப்போவதில்லை.
இவர்கள் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள். நம்முடைய உரிமைக்கு நாம்தான் போராட வேண்டும். அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும். மத்திய அரசாங்கம் நடுநிலை அரசாங்கமாக இல்லை. தமிழகத்தில் தமிழர்களுக்கு எதிரான ஆட்சிதான் நடந்து வருகிறது என்று கூறினார்.
Related Tags :
Next Story