ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 18 கிராமங்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்


ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 18 கிராமங்கள்  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தை  முற்றுகையிட்டனர்
x
தினத்தந்தி 23 April 2018 5:52 PM IST (Updated: 23 April 2018 5:52 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பேரணியாகச் சென்று, சிப்காட் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட்டனர். #Sterlite


தூத்துக்குடி

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க அனுமதியை ரத்துசெய்ய வேண்டும்; தற்போது இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி, 18 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த 18 கிராம மக்களும் இணைந்து, "ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் இன்று, தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தை முற்றுகையிட முடிவுசெய்தனர்.

18 கிராம மக்களும் மடத்தூர் கிராமத்தில் ஒன்றிணைந்து, சிப்காட் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவகத்தினை முற்றுகையிட பேரணியாக வந்தனர். இதனால், 500-க்கும் மேற்பட்ட போலீஸார் 3 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டி ருந்தனர்.

முதல் அடுக்குத் தடுப்பிலேயே மக்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். போலீஸார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 18 பேர் மட்டும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அலுவலக வளாகத்தில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கண்ணனிடம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி, தூத்துக்குடி சிப்காட் வளாகத்தைவிட்டு இந்த ஆலையை அகற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட பொறியாளர் கண்ணன், "மனுவை அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார். இதையடுத்து, மக்கள் அங்கிருந்து கோஷம் எழுப்பியபடியே திரும்பிச்சென்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வலுத்துவருகிறது.


Next Story