வங்கி கொள்ளையனின் கூட்டாளிகள் யார்? போலீசார் விசாரணை
சென்னை அடையாறில் துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையடித்த வங்கி கொள்ளையனின் கூட்டாளிகள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சத்து 36 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. பணத்தை கொள்ளையடித்த பீகார் மாநிலத்தை சேர்ந்த மனீஷ்குமாரை போலீசாரும், பொதுமக்களும் மடக்கிப்பிடித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையன் மனீஷ்குமார் கேளம்பாக்கத்தில் வாடகைக்கு ஒரு அறை எடுத்து தங்கியது தெரியவந்தது.
அறையில் சோதனை
இதையடுத்து போலீசார் கேளம்பாக்கம் சென்று மனீஷ்குமார் தங்கி இருந்த அறையில் சோதனை போட்டு, அங்கிருந்த ஒரு பையை கைப்பற்றினார்கள். மேலும் அந்த அறையில் தங்கி இருந்த ஒரு நபரையும் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
கொள்ளையன் மனீஷ்குமார் வங்கிக்குள் இருந்தபோது ‘புளூடூத்’ மூலம் வேறு யாரிடமோ பேசி இருக்கிறான். எனவே அவனது கூட்டாளிகள் யாராவது வெளியே நின்றபடி கண்காணித்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
கொள்ளையன் மனீஷ் குமார் மீது வேறு ஏதாவது வழக்குகள் உள்ளதா? அவனது கூட்டாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொள்ளை சம்பவத்தால் அடையாறு இந்திராநகர் பகுதி நேற்று பிற்பகலில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
‘என்கவுண்ட்டர்’
கடந்த 2012-ம் ஆண்டு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் சென்னையில் வங்கிகளில் புகுந்து துப்பாக்கி முனையில் சினிமா பாணியில் கொள்ளையடித்தனர். இதில் 5 கொள்ளையர் களை ‘என்கவுண்ட்டர்’ முறையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்கள்.
அந்த சம்பவத்துக்கு பிறகு பீகார் போன்ற வடமாநில கொள்ளையர்களின் அட்டூழியம் ஓரளவு தலையெடுக்காமல் இருந்தது. தற்போது மீண்டும் வடமாநில கொள்ளையர்களின் அட்டூழியம் அரங்கேற தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story