ரெயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி அச்சிடப்பட்டது பயணிகள் வரவேற்பு
சென்னை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய ரெயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத ரெயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி அச்சிடப்பட்டது.
சென்னை,
தெற்கு ரெயில்வேயில் முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகளில் பயணம் செய்வதற்கான சாதாரண டிக்கெட் எடுப்பதற்காக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்வதற்கான சாதாரண டிக்கெட்டில் புறப்படும் இடமும், சேரும் இடமும் இந்தி மற்றும் ஆங்கிலம் மொழியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதனால் இந்தி மற்றும் ஆங்கிலம் படிக்க தெரியாதவர்கள் அந்த டிக்கெட்டை வைத்து எதுவரையிலும் ரெயிலில் பயணம் செய்யலாம்? எந்த ரெயில் நிலையங்கள் வரை பயணிக்க டிக்கெட் கொடுக்கப்பட்டிருக்கிறது? என்று புரிந்துகொள்ளமுடியாமல் தவித்தனர்.
இதையடுத்து சாதாரண டிக்கெட்டில் பயண விவரங்கள் பிராந்திய மொழிகளிலும் இடம்பெற வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதை ஏற்று ரெயில்வே அமைச்சகம் கர்நாடகத்தில் கன்னட மொழியிலும், ஆந்திராவில் தெலுங்கு மொழியிலும் சாதாரண டிக்கெட்டில் பயணிகள் புறப்படும் இடம், சேரும் இடம் போன்றவற்றை அச்சடித்து வழங்கி வந்தது.
தமிழகத்திலும் இதே போன்று சாதாரண டிக்கெட்டில் தமிழ் மொழியில் பயண விவரங்களை இடம் பெற செய்யவேண்டும் என்று தெற்கு ரெயில்வேக்கும், ரெயில்வே அமைச்சகத்துக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்று ரெயில்வே அமைச்சகம் சாதாரண டிக்கெட்டில் தமிழ் மொழியை இணைத்துள்ளது. அதன்படி, சென்னை சென்டிரல், திருச்சி, சேலம் மற்றும் மதுரை ரெயில் நிலையங்களில் இருந்து எடுக்கப்படும் சாதாரண டிக்கெட்டுகளில் புறப்படும் இடம், சேரும் இடம் போன்ற விவரங்கள் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் சாதாரண டிக்கெட்டுகளில் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் பயண விவரங்கள் அச்சிடப்பட்டு உள்ளன.
இந்த புதிய நடைமுறைக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “ரெயில் டிக்கெட்டில் பிராந்திய மொழி இடம்பெறுவது வரவேற்கத்தக்கது ஆகும். இதன்மூலம் தமிழ் மட்டுமே தெரிந்த பயணிகள் மிகவும் பயனடைவார்கள். குறிப்பிட்ட ரெயில் நிலையங்கள் மட்டுமல்லாது அனைத்து ரெயில் நிலையங்களிலும் இந்த டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதேபோல கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், பாலக்காடு, எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து எடுக்கும் சாதாரண டிக்கெட்டில் அந்த மாநிலத்தின் மொழியான மலையாளத்தில் பயண விவரங்கள் இடம் பெற்றிருக்கிறது.
Related Tags :
Next Story