உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி கமல்ஹாசன் அறிவிப்பு
‘எப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்’ என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாதிரி கிராம சபை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் டாக்டர் கமீலா நாசர், கவிஞர் சினேகன், நடிகர் பரணி மற்றும் உறுப்பினர்களும், கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் பங்கேற்றனர். கிராமத்தில் தரையில் அமர்ந்து பஞ்சாயத்து கூட்டம் நடைபெறுவது போன்று இக்கூட்டம் நடந்தது. கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் மக்களின் கருத்துகள் கேட்டு தீர்மானம் நிறைவேற்றுவது போன்று சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்று பேசியதாவது:-
கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரை தொகை ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 524 கிராமங்கள் இருக்கின்றன. இதை கோடிகள் மூலம் பெருக்கி பாருங்கள், குப்பை தன்னாலே பொறுக்கி காணாமல் போய்விடும். அத்தனை பணம் இருக்கிறது. அதை பயன்படுத்துகிறீர்களா? என்பது தான் கேள்வி. நானும் கிராமத்தில் இருந்து வந்தவன் தான். கிராமத்து மக்களை நோக்கி கிராமத்து மக்களே வீசும் கேள்வி என்று வைத்துக்கொள்ளலாம்.
ஊழல் ஒழிப்பு என்பது ஒரே நாளில் செய்வது அல்ல. முதலில் குறைப்பு, பின்பு தடுப்பு, அதன்பின்னர் தான் ஒழிப்பு. கிராம பஞ்சாயத்து என்பது ஊற்று போன்றது. அதில் நாம் அஜாக்கிரதையால் சாக்கடையை கலக்க விட்டுவிட்டோம். இப்ப அதை முழுவதும் தோண்டி எடுத்து, மறுபடியும் ஊற்று வர வைக்க வேண்டும்.
இப்போது காவிரி போராட்டம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த கிராம பஞ்சாயத்து நினைத்தால், இவர்கள் குரல்கள் வலுத்தால், பதில் சொல்ல வேண்டிய கடமை நாடாளுமன்றத்துக்கு இருக்கிறது.
மரத்தடியில் உட்கார்ந்து இதற்கான முடிவை நாம் செய்ய முடியும்.
மே 1-ந் தேதி, ஆகஸ்டு 15-ந் தேதி, அக்டோபர் 2-ந் தேதி, ஜனவரி 26-ந் தேதி ஆகிய 4 நாட்கள் கண்டிப்பாக கிராமசபை கூட்டங்கள் நடந்தே ஆக வேண்டும் என்பது சட்டம். அது நடக்கவில்லை என்பது நடப்பு. அதை மாற்ற வேண்டும். அந்த சட்டத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்பது நம்முடைய கடமை.
கிராமசபை கூட்டத்தை நடத்துங்கள் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது. நம்முடைய சிறு புரட்சி தொடங்கிவிட்டதாகவே நீங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.
கோட்டையும், சட்டசபையும் வருவதற்கு முன்பே கிராம பஞ்சாயத்து சபை நடந்துகொண்டு இருக்கிறது. எனவே கிராமங்கள் தங்களுடைய வேலையை செய்யட்டும். கோட்டை கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும். தொழில் வளர வேண்டும் என்பதில் கிராமங்களுக்கும் ஆசை இருக்கிறது. ஒரு ஆர்வம் இருக்கிறது. ஆனால் உயிரை கொடுத்து அந்த தொழிலை வளர்க வேண்டும் என்ற கடமை எந்த கிராமத்துக்கும் கிடையாது.
மந்திரிகள் எல்லாம் சிவில் சர்வண்ட் (அரசு ஊழியர்கள்) இல்லை. என்னை கேட்டால், நாம் எல்லோரும் தான் சிவில் சர்வண்ட்.
வேலையை செய்தால் அவர்களை எப்படி வேண்டும் என்றாலும் நாம் கூப்பிடலாம். எங்களுடைய ஆசை கிராமங்களுக்கு கொடுக்கப்பட்ட பலம், நகரங்களில் இருக்கும் வார்டுகளுக்கும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு மல்டி ஸ்டோரிட் (அடுக்குமாடி) கட்டிடங்களும் ஒரு சின்ன கிராமத்துக்கு சமம். அத்தனை பேர், அதில் இருக்கிறார்கள். அவர்கள் தண்ணீர் வரவில்லை என்றால், சங்கத்தின் செயலாளரிடம் சொன்னால் போதும் என்று நினைக்கிறார்கள்.
பிளாட்டுக்குள்ளேயே எல்லாத்தையும் முடித்துக்கொள்ளாமல், ஒரு அடி ரோட்டில் காலை எடுத்து வைத்தீர்கள் என்றால், மீதியை கோட்டை வரை கொண்டு செல்வது எங்களுடைய கடமை. நகரத்தில் இருப்பவர்கள் அந்த ஒரு அடியை எடுத்து வையுங்கள்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அடி கணக்கு எல்லாம் பார்க்காமல் ஓட்டுச்சாவடிக்கு போயிட்டு வந்திடுங்கள். கிராமத்தில் வெயில், மழையை பார்க்காமல் கடமையை செய்துவிட்டு வந்துவிடுவார்கள். அதே உணர்வு நகரத்திலும் வர வேண்டும்.
கேரளாவில் இதுபோன்று கிராம பஞ்சாயத்துக்களை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். அங்கு ஆயிரம் கிராமங்கள் இருக்கிறது. பஞ்சாயத்து தலைவர்களுக்கும், ஊழியர்களுக்கும் அரசே ஊதியம் வழங்குகிறது. அதை தமிழ்நாட்டில் செய்தால் நன்றாக இருக்கும் என்பது எங்களுடைய கோரிக்கை. எம்.எல்.ஏ.க்கள் ஊதியத்தை முடிவு செய்யும்போது, அந்த மாதிரி ஒற்றுமையை சட்டசபையில் பார்த்திருக்கவே முடியாது. அப்படி எல்லாரும் சந்தோஷமாக ஒன்றுகூடி அந்த முடிவை எடுத்தார்கள்.
கிராமத்துக்கு விழிப்புணர்வு வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் துண்டுபிரசுரங்கள் வழங்குவார்கள். கிராமத்தை தத்து எடுக்கும் முயற்சியில் பலர் தோல்வி அடைந்து இருக்கிறார்கள். நாங்கள் 8 கிராமங்களை தத்தெடுக்க பட்டப்பாடு எங்களுக்கு மட்டும் தான் தெரியும். முக்கிய காரணம் கிராமத்தின் அனுமதி இல்லாமல் தத்து எடுக்க முடியாது. கிராமம் எடுப்பார் கைப்புள்ள இல்லை. எனவே மக்கள் நீதி மய்யத்தில் இருப்பவர்கள் கிராமத்தை தத்து எடுப்பதற்காக புறப்பட்டு போய் விடாதீர்கள். அப்புறம் இது பக்தி பஜனைக்கு புறப்படும் கூட்டம் போன்று ஆகிவிடும்.
மே 1-ந் தேதி நானும் ஒரு கிராமத்துக்கு சென்று கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க போகவேண்டும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாங்கள் மக்களுக்கான புதிய சிம்மாசனத்தை வடிவமைத்து கொண்டிருக்கிறோம். நலமாக மக்கள் வாழும் பூமியை தயார் செய்து கொண்டிருக்கிறோம். கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு புரிந்து கொள்ளவேண்டும். உள்ளாட்சிதான் நமது பலம். எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். மக்கள் நீதி மய்யம் ஊழலுக்கு எதிராக களமாடும். பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.
யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும். நாங்கள் புதிய தமிழகத்தை உருவாக்கி வருகிறோம். அப்போது கற்பு தியாகங்கள் செய்யவேண்டிய நிலை ஒருபோதும் வராது. எஸ்.வி.சேகர் தரம் தாழ்ந்து கருத்து தெரிவித்தது கண்டனத்துக்குரியது. இழிவாக யாரையும் பேசக்கூடாது. தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்களை கண்டிக்கவேண்டியது ஊடகங்களின் கடமை. விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான் மாதிரி கிராம சபை கூட்டம் சென்னையில் நடத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story