காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னையில், தமிழ் இலக்கிய கூட்டமைப்பு உண்ணாவிரதம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னையில், தமிழ் இலக்கிய கூட்டமைப்பு உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 26 April 2018 3:45 AM IST (Updated: 26 April 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ் இலக்கிய கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது.

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரி அனைத்து தமிழ் இலக்கிய கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வா.மு.சேதுராமன் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் மு.மேத்தா, சிலம்பொலி செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

‘எழுகதிர்’ ஆசிரியர் அரு.கோபாலன், ‘சுடரும் சுழலும் இலக்கிய உறவுகள் கூட்டமைப்பு’ பொதுச்செயலாளர் ச.சண்முகநாதன், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், எழுத்தாளர்கள் ஈரோடு தமிழன்பன், மறைமலை இலக்குவனார், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், க.ராவணன், தி.வ.மெய்கண்டார், அ.தங்கவேல், ராமசாமி உள்பட எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தின்போது வா.மு.சேதுராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சங்க காலம் தொட்டே காவிரி நீரின் பெருமையும், அதன் பங்கீடும் வரலாற்றில் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் சட்ட நெறிமுறைகளை மீறி காவிரியின் குறுக்கே அணைகளை கட்டி கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. பல இடர்பாடுகளை கடந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், மத்திய அரசு அதை செய்யவில்லை.

‘ஸ்கீம்’ என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டும், கர்நாடகா மாநில தேர்தலை மனதில் வைத்தும் மத்திய அரசு தமிழகத்துக்கு பெரும் துரோகம் புரிந்து வருகிறது. சர்வாதிகாரி போல செயல்பட்டு வரும் மோடி தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறார். தமிழகத்தின் தனித்தன்மை இனியும் குலையாமல் இருக்க காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story