பத்திரிகை ஆசிரியராக இருந்த கவர்னரின் மலரும் நினைவுகள்


பத்திரிகை ஆசிரியராக இருந்த கவர்னரின் மலரும் நினைவுகள்
x
தினத்தந்தி 26 April 2018 4:15 AM IST (Updated: 26 April 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை ராஜ்பவனில் ‘தினத்தந்தி’க்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.

சென்னை, 

பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- பல ஆண்டுகளாக நீங்கள் பத்திரிகையாளராக இருந்திருக்கிறீர்கள். அரசியல்வாதி மற்றும் கவர்னர் என்ற நிலைக்கு மாற்றம் எப்படி வந்தது? இந்த 3 நிலைகளில் நீங்கள் அதிகம் விரும்புவது எதை?

பதில்:- மராட்டிய மாநிலம் நாக்பூர், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர், மத்தியபிரதேசம் போபால், ஜபல்பூர் ஆகிய இடங்களில் இருந்து தற்போது வெளி வந்துகொண்டிருக்கும் ‘ஹிட்டாவாடா’ (அனைவருக்கும் நலன்) என்ற பத்திரிகை, 1911-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அப்போது சுதந்திர போராட்ட தியாகி கோபாலகிருஷ்ண கோகலே அதன் மேலாண்மை இயக்குனராக இருந்தார். ஆனால் சில காரணங்களுக்காக அது 1970-ம் ஆண்டுகளின் மத்தியில் மூடப்பட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட என்னுடன் நன்றாகப் பழகிய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர்.

இந்த நிலையில் 1977-ம் ஆண்டு பாரதீய வித்யாபவன் என்ற மிகப் பெரிய பள்ளிக்கான கட்டிடத்தை கட்டுவதற்கு எனது குடும்பம் கணிசமான தொகையை வழங்கியது. நான் எம்.எல்.ஏ.வாக ஆன நிலையில், பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர்கள் பற்றியும், வேலையிழந்து நிற்கும் தொழிலாளிகளின் நலன் பற்றியும், அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டிய அவசியம் பற்றியும் சிந்தித்தேன். 1978-ம் ஆண்டில் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு ‘ஹிட்டாவாடா’ பத்திரிகையை தொடங்கினேன். கவர்னராக பதவி ஏற்கும்வரை அதை நான் நிர்வாக ஆசிரியராக நிர்வகித்து வந்தேன்.

ஒரு பத்திரிகையாளனாக இருந்தபோது அரசின் கொள்கைகள், தவறுகள், பின்தங்கும் நிலை போன்றவற்றை சுட்டிக் காட்டி இருக்கிறேன். பல பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன். இந்தத் தொழிலில் தர்மம் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதில் சமரசம் கிடையாது. ‘ஹிட்டாவாடா’ பத்திரிகை மிகச் சிறப்பாக செயல்படுவதாக மறைந்த ஜனாதிபதி ஜெயில் சிங் பாராட்டியுள்ளார். அடல் பிஹாரி வாஜ்பாய், அத்வானி மற்றும் இந்திரா காந்தி ஆகிய அரசியல் தலைவர்களும் பாராட்டியுள்ளனர். இவர்கள் அனைவரும் பத்திரிகை அலுவலகத்துக்கு வந்துள்ளனர்.

பத்திரிகைத் துறையிலும், அரசியலிலும் எனக்கு நீண்ட அனுபவம் உள்ளது. அரசியல்வாதி, பத்திரிகையாளர், கவர்னர் ஆகிய 3 பொறுப்புகளுமே எனக்கு பிடித்தமானவைதான். மூன்றிலுமே நான் முழு அர்ப்பணிப்போடும், சுயநலனற்ற சேவையையும் ஆற்றி வருகிறேன். எனவே 3 பொறுப்புகளிலும் மனநிறைவு கொண்டுள்ளேன். எனது கொள்கை, மக்கள் சேவையே.

அரசியல்வாதியாக நான் பல பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தி இருக்கிறேன். தற்போதுள்ள பத்திரிகையாளர்களும் முன்பிருந்தவர்களைப் போல கூர்மையானவர்கள்தான். 

Next Story