பேராசிரியை விவகாரத்தில் இருதரப்பு விசாரணையால் முரண்பாடு ஏற்படாது தமிழக கவர்னர் புரோகித் சிறப்பு பேட்டி
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் இருதரப்பு விசாரணையால் முரண்பாடு ஏற்படாது என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
சென்னை,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை ராஜ்பவனில் ‘தினத்தந்தி’ தலைமைச் செய்தியாளர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில் களும் வருமாறு:-
கேள்வி:- அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், ஓய்வு பெற்ற நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் நீங்கள் உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்துள்ளர்கள். ஆனால் மாநில அரசும் அதுபற்றி விசாரணை செய்வதற்காக வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்துள்ளது. இரு தரப்பு விசாரணையால் முரண்பாடு ஏற்படாதா?
பதில்:- இது இரண்டுமே வெவ்வேறு விஷயம். இதுதொடர்பாக போலீசுக்கு கல்லூரி நிர்வாகத்தில் இருந்து ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போலீசார் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வழக்கில் உள்ள முக்கியத்துவத்தை கருதி உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன். அது குற்ற நடத்தை சம்பந்தமானது.
அதே நேரத்தில் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில், குற்றம்புரிந்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது எனது கடமையாக உள்ளது. ஒரு நபர் குழு என்பது உண்மையைக் கண்டறியும் குழுவாகும்.
அதன்படி நடவடிக்கை எடுப்பதற்காக அதன் அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைப்பேன். அதை மறைக்க மாட்டேன். அதில் வெளிப்படைத்தன்மை இருக்கும்.
எங்கள் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நான் தெரிவிப்பேன். ஆனால் அந்த சம்பவத்தில் உள்ள குற்ற செயல்பாடு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கிறது.
கேள்வி:- கல்லூரி பேராசிரியை விவகாரத்தில் ஒரு விசாரணைக் குழுவை நியமிப்பதற்கு வேந்தர் என்ற முறையில் உங்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக விதி அதிகாரம் அளிக்கிறதா? ஏனென்றால், ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தனிச் சட்டங்கள் உள்ளதே?
பதில்:- மதுரை காமராஜர் பல்கலைக்கழக விதியின் 12(4)(ஏ) பிரிவின்படி வேந்தரால் அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கான முன்மொழிவை துணை வேந்தர்தான் அனுப்பினார்.
கேள்வி:- கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியை விசாரிப்பேன் என்று ஆர்.சந்தானம் கூறியுள்ளார். ஆனால் அவரை வேறு முகமையினர் யாரையும் விசாரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கூறியுள்ளனரே?
பதில்:- இது எப்போதுமே நடக்கும். இப்போது சி.பி.சி.ஐ.டி. அந்த பேராசிரியையை தங்களின் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். அவர்கள் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. எனவே அவரை விசாரிப்பதற்காக ஆர்.சந்தானம் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் மேலும் சில நாட்கள் காத்திருக்கும். சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பிறகு அவர் சிறைக்கு அனுப்பப்படுவார். சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பிறகு அவர் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு சென்று பேராசிரியையை ஆர்.சந்தானம் சந்தித்து பேசுவார். அப்போது கேள்விகளை அவர் கேட்க முடியும். பிரச்சினைகள் எழாது.
கேள்வி:- விசாரணைக்கு பிறகு விசாரணைக் குழு ஒரு கருத்தையும், சி.பி.சி.ஐ.டி. மற்றொரு கருத்தையும் கூறினால், யாருடைய விசாரணை ஏற்றுக்கொள்ளப்படும்?
பதில்:- சி.பி.சி.ஐ.டி. வழக்கு என்பது அதிலுள்ள கிரிமினல் நடவடிக்கை பற்றியது. ஆனால் ஆர்.சந்தானம் குழுவின் விசாரணை, பல்கலைக்கழகம் தொடர்புடையது. ஒன்றை ஒன்று முரண்படுத்தும் நிலையில் இருக்காது.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
கேள்வி:- நீங்கள் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறீர்கள். இதுவரை எத்தனை மாவட்டங்களுக்கு சென்று இருக்கிறீர்கள்? அந்த மாவட்டங்கள் எவை?
பதில்:- இதுவரை கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், சேலம், தஞ்சாவூர், தர்மபுரி, வேலூர், மதுரை, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருச்சி, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய 15 மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். மீதம் உள்ள மாவட்டங்களிலும் விரைவில் சுற்றுப்பயணம் செய்து அதிகாரிகளையும், மக்களையும் சந்திக்க இருக்கிறேன்.
கேள்வி:- உங்கள் மாவட்ட பயணத்தை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?
பதில்:- அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தின்படி மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் கவர்னர். அரசு அலுவலர்கள், ஊழியர்கள் நிர்வாகத்தின் கீழ் வருகிறார்கள். அந்த வகையில்தான் மாவட்டங்களில் உயர் அதிகாரிகளுக்கு வழிகாட்டுகிறேன். அவர்கள் ஆற்றும் பணிகளை தெரிந்துகொள்கிறேன். இதற்கு கவர்னர் என்ற முறையில் எனக்கு மாவட்டங்களைப் பற்றி தெரிய வேண்டும். எனவே அனைத்து மாவட்டங்களைப் பற்றிய தகவல்களையும் அறிய விரும்பினேன்.
ராஜ்பவனில் இருந்துகொண்டே இருப்பதன் மூலம் எதையும் தெரிந்துகொள்ள முடியாது. சாலை, ரெயில் வழி பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தேன்.
கேள்வி:- இந்த பயணத்தை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?
பதில்:- அதற்கான காரணம் எனக்கு புலப்படவில்லை. நான் ஏழைகள், அடித்தட்டு மக்களிடம் இருந்து மனுக்களை பெறுகிறேன். மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரிடம் பேசி அந்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணும்படி அறிவுறுத்துகிறேன். மனுக்கள் அனைத்துமே பதிவு செய்யப்படுகின்றன.
அரசு அதிகாரிகளை நேரில் சந்திப்பதன் மூலம் நிச்சயமாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாவட்ட அதிகாரிகளை சந்திப்பதில் நான் மராட்டிய மாநில முன்னாள் அட்வகேட் ஜெனரலான மூத்த வக்கீலிடம் ஆலோசனை பெற்றேன். இந்திய அரசியல் சாசனத்தின்படி செயல்படுவது எனது கடமை. எனது கடமையைத்தான் செய்கிறேன். அலுவலர்களின் வேலைகளில் குறைபாடு கண்டுபிடிப்பதற்கும், தண்டிப்பதற்கும் நான் இங்கு வரவில்லை என்றும், அவர்கள் தங்கள் கடமையைச் செய்ய ஊக்கப்படுத்தவும்தான் உள்ளேன் என்பதையும் அவர்களிடம் கூறியிருக்கிறேன்.
செங்கோட்டையில் இருந்து பிரதமர் ஆற்றும் உரைகளில், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். அரசு அலுவலர்களிடமும் நான் சொல்வதெல்லாம், ஊழல் இல்லாமல் பணிகளை நடத்துங்கள். ஊழல் இல்லாத நிர்வாகம் வேண்டும். எளிமையாக வாழ்க்கை நடத்தப் பழகுங்கள்; ஆடம்பர வாழ்க்கையை நடத்தாதீர்கள் என்பதுதான்.
அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காகத்தான் மாவட்டங்களுக்கு பயணிக்கிறேன். ஊழலை ஒழிப்பதில் பத்திரிகைகளும் எனக்கு உதவ வேண்டும். ஊழல் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்காமல், எளிமையான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும்.
நானும் பொதுமக்கள் பணத்தை தேவையில்லாமல் செலவழிப்பதை தவிர்க்கிறேன். தமிழக அரசிடம் இருக்கும் ஹெலிகாப்டரையோ, அரசு செலவில் தனி விமானத்தையோ நான் பயன்படுத்தியதில்லை. முடிந்தவரை ரெயிலில் செல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறேன். மக்களோடு மக்களாக பயணிக்கிறேன். அப்படி செல்லும்போது மக்கள் தங்கள் பிரச்சினைகளை என்னிடம் கூற வாய்ப்பு ஏற்படுகிறது.
ரெயிலில் சலூன் என்று அழைக்கப்படும் சிறப்பு தனிப்பெட்டியில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் சென்றால் டிக்கெட்டுக்கு ரூ.2.50 லட்சம் செலவாகும் என்றனர். ஆனால் என்னுடன் பயணிக்கும் அனைவருக்கும் ரெயில்வே துறை மூலம் டிக்கெட் எடுத்துச் சென்றால் ரூ.20 ஆயிரம் மட்டுமே செலவு ஆகிறது. இரண்டு செலவையும் ஒப்பிட்டுப்பார்த்துவிட்டு, நான் சிறப்பு பெட்டியில் பயணிப்பதை தவிர்த்துவிட்டேன்.
கேள்வி:- தமிழக கவர்னராக நீங்கள் 6 மாதங்களை முடித்திருக்கிறீர்கள். திரும்பிப் பார்க்கும்போது உங்களின் செயல்பாடுகளைப் பற்றி என்ன உணர்கிறீர்கள்?
பதில்:- எனக்கு திருப்தி அளிக்கிறது.
கேள்வி:- எந்த பிரச்சினை என்றாலும் அனைத்து அரசியல் கட்சிகளும் போராட ராஜ்பவனுக்கு முன்னால் கூடுவது ஏன்? மக்களை மையப்படுத்தும் பிரச்சினைகளுக்காகத்தான் அவர்கள் அப்படி நடந்துகொள்வதாக நினைக்கிறீர்களா?
பதில்:- ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியும் அவர்களின் கடமையை ஆற்றுகின்றனர். அதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. என்ன பிரச்சினை, குறைபாடு உள்ளது என்பதை வெளிப்படுத்துவது அவர்களின் கடமை. மனுக்களுடன் வந்து என்னை சந்திக்கின்றனர். அதில் நான் எனது கண்ணோட்டத்தைக் கூறுகிறேன். அந்த வகையில் கலந்துரையாடுகிறோம்.
கேள்வி:- தமிழக அரசுடன் உங்கள் உறவு எப்படி உள்ளது?
பதில்:- எந்த மோதல் போக்கும் இல்லை.
கேள்வி:- தமிழக அரசின் செயல்பாட்டை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?
பதில்:- முன்னேற்றம் காணும் முயற்சியில் அரசு உள்ளது. அந்த முயற்சி மும்முரமாக உள்ளதாக காணப்படுகிறது.
இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதில் அளித்தார்.
Related Tags :
Next Story