பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு 75 நாட்கள் ஆகின்றன காலம் தாழ்த்தாமல் அனுமதி வழங்க வலியுறுத்தல்
பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு 75 நாட்கள் ஆகின்றன காலம் தாழ்த்தாமல் அனுமதி வழங்க வலியுறுத்தல்
சென்னை,
தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை வழங்குவதற்காக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு 75 நாட்கள் ஆகின்றன. பிரதமர் காலம் தாழ்த்தாமல் சந்திக்க அனுமதி வழங்கவேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
காவிரி பிரச்சினை தொடர்பாக பல ஆண்டுகளாக நீடித்து வந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில் ஏற்கனவே தமிழகத்துக்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி. தண்ணீர் அளவை குறைத்து, 177.25 டி.எம்.சி. தண்ணீர் அளவாக நிர்ணயம் செய்தது.
இது ஒருபுறம் பாதிப்பாக இருந்தாலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்தும் குழுவை 6 வார கால அவகாசத்தில் அமைக்கவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது. இந்த இறுதி தீர்ப்பு வெளியான பிறகு, தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்தது.
இதற்காக 30 அரசியல் கட்சிகள், 9 அரசியல் அமைப்புகள் மற்றும் 14 விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் காவிரி பிரச்சினை தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் முக்கியமாக காவிரி மேலாண்மை வாரியம், காவிரிநீர் முறைப்படுத்தும் குழுவை உடனடியாக அமைக்கவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தமிழகத்துக்கு சாதகமான அம்சங்களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், முதல்-அமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்திப்போம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததுபோல், ஒட்டுமொத்த தமிழ் அமைப்புகள், விவசாய சங்கங்கள், கலைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் தமிழகம் முழுவதும் நீர்பூத்த நெருப்பாக போராட்டக்களம் இருந்து வருகிறது.
தமிழக அரசு தரப்பில் இருந்து பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டி கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை என்றும், மாறாக மத்திய அரசிடம் இருந்து வந்த கடிதத்தில் நீர்வளத்துறை மந்திரியை சந்திக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் முதல்-அமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.
தமிழக அரசு பிரதமரை சந்திப்பதற்கான நேரத்தை பெற்றுத்தருவதில் பின்னடைவை சந்தித்துவிட்டதாக கூறி, ம.தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட 9 கூட்டணி கட்சிகளுடன் கடந்த ஏப்ரல் 16-ந் தேதி இதே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அடுத்தகட்ட போராட்டம் குறித்து தி.மு.க. ஆலோசனை நடத்தியது.
கூட்டம் முடிந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறும்போது, ‘காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பிரதமரை சந்திக்க நேரம் கேட்க உள்ளோம்’ என்று தெரிவித்தார்.
மேலும், தி.மு.க. சார்பில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர். அப்போது அவரிடம் பிரதமரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தர ஏற்பாடு செய்வதாக மு.க.ஸ்டாலினிடம், கவர்னர் உறுதியளித்தார்.
இவ்வாறாக முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும், தி.மு.க. சார்பில் நடந்த கூட்டணி கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் இதுவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்காதது பெரும் ஏமாற்றம் தான்.
இது ஒருபுறம் இருக்க, கர்நாடகாவில் நடைபெற உள்ள தேர்தலுக்காகவே காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குற்றம்சாட்டி வரும் நிலையில், பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டும், இதுவரை அனுமதிக்காமல் காலம் தாழ்த்துவது காவிரி மேலாண்மை வாரியத்துக்கு தீர்வு கிடைக் குமா? என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் பிரதமரை சந்திக்க முடிவு செய்து, இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 75 நாட்கள் முடிந்துவிட்டது. இனிமேலும், காலம் தாழ்த்துவது சரியாக இருக்காது. உடனடியாக பிரதமர், தமிழக அரசு கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் சந்திக்க நேரம் ஒதுக்கவேண்டும். தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினையாக திகழும் காவிரி நீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதை தான், தமிழக அரசியல் கட்சிகளும், அனைத்து தரப்பு மக்களும் வலியுறுத்துகின்றனர்.
Related Tags :
Next Story