நாடு முழுவதும் 2.62 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பு மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான்


நாடு முழுவதும் 2.62 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பு மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான்
x
தினத்தந்தி 8 May 2018 5:15 AM IST (Updated: 8 May 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

ஆதார் எண் இணைப்பு மூலம் தமிழ்நாட்டில் 10 லட்சம் கார்டுகள் உள்பட நாடு முழுவதும் 2 கோடியே 62 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

சென்னை, 

இந்திய உணவு கழகம் சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் எவ்வாறு அமல்படுத்தப்பட்டுள்ளது? என்பது தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கலந்துகொண்டு ஆய்வு நடத்தினார்.

பின்னர் அவர், இந்திய உணவு கழக செயல் இயக்குனர் (தெற்கு) ஆர்.டி.நஜீம், தமிழக பொதுமேலாளர்கள் எச்.எஸ்.தலில்வால், ஷைனி வில்சன், மாநில உணவுத்துறை ஆணையர் மதுமதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் சுதாதேவி, மத்திய கிடங்கு துறையின் மண்டல மேலாளர் ஏ.டி.சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 886 மையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்கிறது. வரும் ஜூன் மாதம் வரை இந்த மையங்கள் செயல்படும். நடப்பாண்டு கரீப் பருவத்தில் கடந்த 3-ந் தேதி வரை 10.41 லட்சம் மெட்ரிக் டன் நெல், 2.88 லட்சம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மண்டலத்தில் 3 அல்லது 4 மாதங்களுக்கு தேவையான 10.41 லட்சம் மெட்ரிக் டன் உணவு பொருட்களை பாதுகாத்து வைக்கும் அளவு கொண்ட கிடங்குகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொது வினியோக திட்டத்துக்கு ஆண்டுக்கு 36.83 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும், 2 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் தேவைப்படுகிறது.

பொதுவினியோக திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் மூலம் நாடு முழுவதும் 2 கோடியே 62 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6.39 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த போலி ரேஷன் கார்டுகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. மானியமாக வழங்கப்படும் உணவு பொருட்கள் உண்மையிலேயே யாருக்கு போய் சேரவேண்டுமோ அவர்களுக்கு சென்றடைகிறது. தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மின்னணு எந்திரம் மூலம் உணவு பொருட்கள் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

நீட் தேர்வு எழுத பிற மாநிலங்களுக்கு மாணவர்களை அனுப்புவது சரியல்ல என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரியிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் அடுத்த ஆண்டு அருகிலேயே தேர்வு மையங்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மத்தியில் நரேந்திர மோடி அரசு அமைந்த உடன் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் நலன்கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வன்கொடுமை தொடர்பாக சில உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ளது. இதனை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. சில பொதுநல அமைப்புகளும் வழக்குகளை தொடுத்து உள்ளன. சுப்ரீம் கோர்ட்டில் முறையாக நீதி கிடைக்கவில்லை என்றால், தனியாக அவசர சட்டம் கொண்டுவந்து அவர்களுடைய உரிமையை பெற்றுத்தருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story