‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் சென்னை தியாகராயநகர் புதுப்பொலிவு பெறுகிறது
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் சென்னை தியாகராயநகரில் ரூ.33.80 கோடியில் சகல வசதிகளுடன் நடைபாதை வளாகம் அமைக்கும் பணிகள் தொடங்கியது.
சென்னை,
நகர்ப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 100 ‘ஸ்மார்ட் சிட்டி’ (சீர்மிகு நகரங்கள்) அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த பட்டியலில் இடம்பெற்ற சென்னையில் வளர்ச்சி திட்டங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் பகுதிசார்ந்த வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற தியாகராயநகர் தேர்வு செய்யப்பட்டது.
காற்று மாசுபடுதலை குறைக்கும் வகையிலும், வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் தியாகராயா சாலையில் நடைபாதை வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற நிதி சேவை நிறுவனம் மூலம் விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு, திட்ட அறிக்கையும் பெறப்பட்டது.
அதன்படி ரூ.33.80 கோடி மதிப்பீட்டில் தியாகராயா சாலையில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தொடங்கிவைத்தார். விழாவில் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சகல வசதிகளுடன்...
இந்த நடைபாதை வளாகத்தில் முதியோர்கள், குழந்தைகள், பாதசாரிகள் தங்குதடையின்றி நடக்கவும், மாற்றுத்திறனாளிகளின் சக்கர நாற்காலிகள் எளிதில் செல்லவும் ஏதுவான தொடர்ச்சியான நடைபாதை அமைக்கப்படுகிறது. இதில் சிறுவர் விளையாட்டு பகுதி, மேம்படுத்தப்பட்ட கழிப்பிடங்கள், பொதுமக்கள் இளைப்பாறுவதற்கு வசதியான இருக்கைகள், தேவையான இடத்தில் அலங்கார விளக்கு கள், கலைநயமிக்க சிலைகள், நீரூற்று மற்றும் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு தக்க இடைவெளியில் வழித்தடம் அமைத்தல் உள்ளிட்டவை முக்கிய அம்சங்கள் ஆகும்.
தியாகராயநகரில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமான பணிகள் மற்றும் போக்குவரத்து மாற்றத்துக்காக பனகல் பூங்கா-தணிகாசலம் சாலை, தணிகாசலம் சாலை-போக் சாலை சந்திப்பு, போக் சாலை சந்திப்பு-அண்ணாசாலை என 3 பிரிவுகளாக பணிகள் பிரிக்கப்பட்டு உள்ளன.
சாலைகளை மறுவடிவமைத்தல்
அதன்படி பனகல் பூங்கா- தணிகாசலம் சாலை இடையே பஸ் மற்றும் இருசக்கர வாகனம் மட்டும் செல்லும் வகையில் 7 மீட்டர் அகலமான வாகனப்பாதையும், மத்திய தடுப்பு சுவரும் அமைக்கப்படவுள்ளது. மேலும் 10 மீட்டர் முதல் 12 மீட்டர் அகலத்தில் நடைபாதை அமைக்கப்படவுள்ளது. அதேபோல இதர பிரிவுகளில் அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் 15 மீட்டர் அகலமான வாகனப்பாதையும், மத்திய தடுப்பு சுவரும் அமைக்கப்படவுள்ளது. இப்பகுதியில் 5 மீட்டர் முதல் 6 மீட்டர் அகலத்தில் நடைபாதை அமைக்கப்படவுள்ளது.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் சென்னையில் 23 சாலைகளை மறுவடிவமைத்தல், சைக்கிள்கள் செல்ல தனியாக வழித்தடம் அமைத்தல், 28 மாநகராட்சி பள்ளிகளில் மின்னணு வகுப்பறை அமைத்தல், தியாகராயா சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைத்தல், போக்குவரத்து குறியீடுகள் மற்றும் சைகைகளை விளக்கும் பூங்கா, மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா, மழைநீர் வடிகால்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.82.36 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
ரம்மியமான சூழ்நிலை
தியாகராயநகரில் நடைபாதை வளாகம் அமைப்பதன் மூலம் பொதுமக்கள் ரம்மியமான, பாதுகாப்பான சூழ்நிலையில் எளிதாக பொருட்களை வாங்க முடியும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக பேட்டரி காரும் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த திட்டம் நிறைவடைந்ததும் தியாகராயநகர் புதுப்பொலிவு பெறும்.
Related Tags :
Next Story