ரெயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதனை: ஓசியில் பயணம் செய்த 1,474 பேர் பிடிபட்டனர்


ரெயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதனை: ஓசியில் பயணம் செய்த 1,474 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 9 May 2018 3:00 AM IST (Updated: 9 May 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் நிலையங்களில் நடத்தப்பட்ட டிக்கெட் பரிசோதனையில் ஓசியில் பயணம் செய்த 1,474 பேர் சிக்கினார்கள்.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை எழும்பூர், சென்டிரல் மற்றும் மதுரை ரெயில் நிலையங்களில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்த 198 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 817 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மேலும் டிக்கெட்டை முறைகேடாக பயன்படுத்துதல் பிரிவின்படி (ரெயில்வே அங்கீகாரம் இல்லாமல் டிக்கெட்டை விற்பனை செய்வது) 3 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 900 மதிப்பிலான டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையின்போது ரெயில்வே நிர்வாக அனுமதியில்லாத 32 தள்ளுவண்டிகள், சந்தேகத்துக்குரிய 93 பார்சல்கள் மீட்டு ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தலின்படி, மேற்கண்ட காலகட்டத்தில் தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட தீவிர பரிசோதனை டிக்கெட் பரிசோதகர்கள் மேற்கொண்டனர். 120 ரெயில்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 1,474 பேர் டிக்கெட் இல்லாமல் ஓசியில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1,062 பேர் டிக்கெட் கட்டணத்தை தாண்டி பயணித்ததும், 48 பேர் டிக்கெட்டை முறைகேடாக பயன்படுத்தியதும், 29 பேர் தங்கள் பார்சல்களுக்கு உரிய கட்டணம் செலுத்தாததும் தெரியவந்தது.

மேலும் ரெயில் நிலைய நடைமேடைகளில் வியாபார நோக்கத்துடன் திரிந்த 29 பேரும் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.12 லட்சத்து 74 ஆயிரத்து 35 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இதுதவிர 61 ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 4 பேர் டிக்கெட்டை விதிமுறை மீறி விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story