பண்பாட்டு சீரழிவு ஏற்படுத்தும் திரைப்படத்தை தடை செய்யவேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


பண்பாட்டு சீரழிவு ஏற்படுத்தும் திரைப்படத்தை தடை செய்யவேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 May 2018 2:47 AM IST (Updated: 9 May 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படம் ஏற்படுத்தி வரும் பண்பாட்டு சீரழிவுகள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.

தமிழகம் இப்போது மிகவும் கடினமான காலக்கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசால் திணிக்கப்படும் அழிவுத் திட்டங்கள், அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக மக்களும், இளைஞர்களும் கொந்தளித்து கொண்டிருக்கின்றனர். இந்த உணர்வுகளை மழுங்கடிக்கும் வகையில் இதுபோன்ற ஆபாசப் படங்கள் வெளியிடப்படுவதை அனுமதிக்க முடியாது. திரைப்படங்கள் மிகவும் சிறப்பான கலை வடிவம் ஆகும். அதை சமுதாயத்தைக் கெடுக்கும் களையாக மாற்றிவிடக்கூடாது.

இதுபோன்ற திரைப்படங்களை திரைப்பட தணிக்கைச் சான்று வாரியம் எவ்வாறு அனுமதிக்கிறது? பெண்மையை இழிவுபடுத்தும் இத்தகைய படங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த மகளிர் அமைப்புகள் முன்வராதது ஏன்? ஆகியவை தான் விடை தெரியாத வினாக்களாக உறுத்துகின்றன. பா.ம.க.வோ, நானோ திரைத்துறைக்கு எதிரிகள் அல்ல. நல்ல திரைப்படங்களை நான் தொடர்ந்து பாராட்டி வருகிறேன்.

பல நல்ல திரைப்படங்கள் வெளிவந்து திரையுலகம் குறித்து விதைத்த நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இந்த ஒரு படம் வெளியாகிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. இத்தகைய சூழல் மாற்றப்பட வேண்டும். மது, புகை மற்றும் பிற போதை பொருட்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளை விட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற ஒற்றைத் திரைப்படம் ஏற்படுத்தி விடும்.

இத்தகைய மலிவான, அருவருக்கத்தக்க ஆபாச படங்களை பார்ப்பதில் இருந்து இளைஞர்களும், மாணவர்களும், தமிழ் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்கவேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்த திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story