குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றவர்களை கிராமவாசிகள் தாக்கியதில் சென்னை பெண் பலி


குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றவர்களை கிராமவாசிகள் தாக்கியதில் சென்னை பெண் பலி
x
தினத்தந்தி 10 May 2018 4:30 AM IST (Updated: 10 May 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து கோவிலுக்கு சாமி கும்பிட சென்றவர்களை, குழந்தை கடத்தல் கும்பல் என்று கருதி கிராமவாசிகள் அடித்து உதைத்ததில் ஒரு பெண் உயிர் இழந்தார்.

போளூர், 

சென்னையில் இருந்து கோவிலுக்கு சாமி கும்பிட சென்றவர்களை, குழந்தை கடத்தல் கும்பல் என்று கருதி கிராமவாசிகள் அடித்து உதைத்ததில் ஒரு பெண் உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த 4 பேருக்கு வேலூர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வட மாநில கும்பல் களின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வருகின்றன.

சமூக வலைத்தளமான வாட்ஸ்-அப், முகநூல் போன்றவற்றில் பரவும் இந்த வதந்திகளால் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் சந்தேகத்தின் பேரில் பொதுமக்களால் தாக்கப்பட்டு உள்ளனர். இதுபோன்ற தாக்குதல்கள் அந்த மாவட்டங்களில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என்று கருதி சென்னையில் இருந்து கோவிலுக்கு சென்றவர்களை கிராம மக்கள் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியதும், இதில் ஒரு பெண் பலியான சம்பவமும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்து உள்ளது.

நெஞ்சை உருக்கும் இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை பல்லாவரம் தர்கா ரோட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ருக்மணி அம்மாள் (வயது 65). இவருடைய கணவர் இறந்துவிட்டார். இவருக்கு பிரபாகரன், கோபிநாத் என்ற 2 மகன்களும் பத்மாவதி என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. பத்மாவதி கணவர் கஜேந்திரனுடன் மயிலாப்பூரில் வசித்து வருகிறார்.

ருக்மணி அம்மாளின் உறவினர்களான மோகன்குமார் (43), சந்திரசேகரன் (47) ஆகியோர் மலேசியாவில் வசித்து வருகின்றனர். இவர்கள், தமிழகத்தில் உள்ள கோவில்களை தரிசனம் செய்வதற்காக, சில நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து சென்னை வந்தனர். ருக்மணி அம்மாள் வீட்டில் போதிய வசதி இல்லாததால் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

இவர்களுடைய குலதெய்வமான மாரியம்மன் கோவில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஜமுனாமரத்தூர் செல்லும் வழியில் உள்ளது. பரிகாரம் செய்வதற்காக குல தெய்வம் கோவிலுக்கு செல்லுமாறு மோகன் குமார், சந்திரசேகரன் ஆகியோரிடம் ஜோதிடர் ஒருவர் கூறியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி மோகன்குமார், சந்திரசேகரன், ருக்மணி அம்மாள், அவரது மருமகன் கஜேந்திரன் (44), உறவினர் பல்லாவரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (54) ஆகியோர் நேற்று ஒரு காரில் ஜமுனாமரத்தூர் சென்றனர். கஜேந்திரன் காரை ஓட்டிச் சென்றார்.

வழியில் அவர்கள் போளூரை அடுத்த தம்புகொட்டான்பாறை என்ற இடத்தில் காரை நிறுத்தி விட்டு, அங்குள்ள ஒரு வீட்டின் வெளியே தனது குழந்தைகளுடன் நின்றிருந்த நீலம்மாள் என்ற பெண்ணிடம், கோவிலுக்கு செல்ல வழி கேட்டனர். அப்போது அவர்கள், மலேசியாவில் இருந்து கொண்டு வந்திருந்த சாக்லெட்டை பாசத்துடன் அந்த குழந்தைகளுக்கு கொடுத்தனர்.

சாக்லெட் கொடுத்ததால், அது மயக்க மருந்து கலந்தது என்றும், வந்திருப்பவர்கள் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த கிராம மக்கள் கருதினார்கள்.

இதனால் ஆவேசம் அடைந்த அவர்கள் திடீரென்று, காரில் இருந்த ருக்மணி அம்மாளையும், மற்றவர்களையும் தாக்கினார்கள்.

இதனால் பயந்து போன அவர்கள், கிராம மக்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து காரை வேகமாக ஓட்டிச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிளில் காரை துரத்திச் சென்றனர். கலியம் என்ற இடத்தில் அவர்கள் காரை வழிமறித்து தடுத்து நிறுத்தினார்கள்.

பின்னர் காரில் இருந்தவர்களை வெளியே இழுத்து அடித்து உதைத்தனர். அந்த சமயத்தில் அந்த ஊர் மக்களும் அங்கு திரண்டு வந்து, குழந்தைகளை கடத்தும் கும்பல் என கருதி அவர்களை தாக்கினார்கள்.

ஆண்களை நிர்வாணப்படுத்தி கீழே தள்ளி சரமாரியாக அடித்தனர். தாங்கள் குழந்தைகளை கடத்த வரவில்லை என்று அவர்கள் எவ்வளவோ கூறியும் வன்முறை கும்பல் அதை பொருட்படுத்தவில்லை. காரையும் அடித்து நொறுக்கினார்கள்.

கிராம மக்களின் கொலைவெறி தாக்குதலில் படுகாயம் அடைந்த ருக்மணி அம்மாள் உள்பட 5 பேரும் நிலைகுலைந்து மயங்கி சாய்ந்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் போளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிராம மக்களிடம் இருந்து அவர்களை மீட்டு போளூர் அத்தியந்தல் சாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், ருக்மணி அம்மாள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவாளிபிரியா, போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்ராஜ், இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதன் பிறகு மோகன்குமார், சந்திரசேகரன், வெங்கடேசன், கஜேந்திரன் ஆகிய 4 பேரையும் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ருக்மணி அம்மாளின் உடல் வைக்கப்பட்டு உள்ள போளூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க அங்கு ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்பாவி ருக்மணி அம்மாள் பொதுமக்களால் தாக்கப்பட்டு உயிர் இழந்த சம்பவம் குறித்து போளூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா கூறியதாவது:-

குழந்தையை கடத்த வந்தவர்கள் என நினைத்து, காரில் வந்த 5 பேரை கிராம மக்கள் தாக்கி உள்ளனர். இதில் ருக்மணி அம்மாள் என்பவர் உயிர் இழந்து உள்ளார். தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்துமாறு காவல்துறையினரை கேட்டுக் கொண்டு உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ருக்மணி அம்மாள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி, கொல்கத்தா சென்றிருந்த அவரது மூத்த மகன் பிரபாகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் உடனடியாக அங்கிருந்து சென்னை விரைந்து வந்தார். பின்னர் அவரும், அவரது தம்பி கோபிநாத், சகோதரி பத்மாவதி மற்றும் உறவினர்கள் போளூர் புறப்பட்டு சென்றனர்.

இதேபோல் வேலூர் மாவட்டத்தில் இரு சம்பவங்கள் நடந்து உள்ளன.

வேலூர் மாவட்டம் சோளிங்கரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அங்கு வந்த சிலர் அவரிடம், எதற்காக இங்கு வந்தாய்? உனக்கு எந்த ஊர்? என கேட்டனர் ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த பெண்ணால் பதில் கூற முடியவில்லை.

இதனால் அந்த பெண், குழந்தையை கடத்த வந்திருக்கலாம் என கருதி அவரை அடித்து உதைத்தனர். அடி தாங்க முடியாமல் அந்த பெண் அலறினார்.

இது குறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ், சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சோளிங்கரை சேர்ந்த விஜய் (வயது 25), முத்து (23), பாபு (26), கணேஷ் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை அருகே உள்ள அம்மூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று வட மாநில வாலிபர் ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்டார். அங்கிருந்தவர்கள், அவர் குழந்தைகளை கடத்த வந்திருப்பவர் என கருதி அவரை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும், ராணிப்பேட்டை போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சஞ்சய் (28) என்றும், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

Next Story