நிர்மலாதேவி விவகாரம்: ‘சந்தானம் கமிஷன் விசாரிக்க தடை இல்லை’ மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
நிர்மலாதேவி விவகாரம் பற்றி அதிகாரி சந்தானம் கமிஷன் விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை கே.கே.நகரை சேர்ந்த செல்வகோமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சமீபத்தில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவி கைதான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் இதே பிரச்சினையை கையில் எடுத்து விசாரிக்கின்றனர். ஒரே பிரச்சினையை 2 பிரிவுகள் விசாரணை செய்வது என்பது ஏற்புடையதல்ல.
எனவே பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக சந்தானம் கமிஷன் விசாரணை செய்ய தடைவிதித்தும், அந்த கமிட்டி விசாரணை செல்லாது என்றும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கோவிந்தராஜ், சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் குறித்த விசாரணை கமிட்டி அமைக்க கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. பல்கலைக்கழக செனட், சிண்டிகேட், துணைவேந்தர் ஆகியோர் தான் கமிட்டி அமைத்திருக்க வேண்டும்” என்று வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்த விஷயத்தில் கவர்னர் கமிட்டி அமைக்க அதிகாரம் உள்ளது. கவர்னரை எதிர்மனுதாரராக சேர்த்ததை ஏற்க முடியாது. எனவே இந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு மனுதாரர் வக்கீல், “மனுவில் திருத்தம் செய்து வேண்டுமானால் மீண்டும் தாக்கல் செய்கிறோம்” என்றார்.
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் இந்த வழக்கை பைசல் செய்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story