நிர்மலாதேவிக்கு 23-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு மீண்டும் மதுரை சிறையில் அடைப்பு


நிர்மலாதேவிக்கு 23-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு மீண்டும் மதுரை சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 10 May 2018 4:15 AM IST (Updated: 10 May 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலாதேவி நேற்று விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விருதுநகர், 

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலாதேவி நேற்று விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவல் வருகிற 23-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. பேராசிரியை நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபின் சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நிர்மலாதேவியின் காவல் நேற்றுடன் முடிவடைந்ததையொட்டி, அவர் மதுரை மத்திய சிறையில் இருந்து போலீசாரால் வேனில் கொண்டுவரப்பட்டு விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி, நிர்மலாதேவியை வருகிற 23-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீசார் அவரை மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

நிர்மலாதேவியின் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்த்த நிலையில் நேற்று அவரது தரப்பில் ஜாமீன் மனு எதுவும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை நிர்மலாதேவியின் வீடு திறந்து கிடந்தது. அதனை பக்கத்து வீட்டை சேர்ந்த பொன்னையா என்பவர் பார்த்து சந்தேகம் அடைந்து, செல்போனில் நிர்மலாதேவியின் கணவர் சரவணபாண்டியனை தொடர்பு கொண்டு தகவல் சொன்னார்.

இதைத்தொடர்ந்து சரவணபாண்டியன் அங்கு விரைந்து வந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும் உள்கதவு கம்பியால் நெம்பி திறக்கப்பட்டு இருப்பதையும் கண்ட அவர் இதுகுறித்து தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. பின்பு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

வீட்டில் ஏதும் திருட்டுப்போனதாக தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர். சரவண பாண்டியனும் விலை உயர்ந்த பொருட்கள் திருட்டுபோக வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். எனினும் விடுபட்ட ஆவணங்களை கைப்பற்ற ஏதேனும் முயற்சி நடந்திருக்குமோ? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story