என்ஜினீயரிங் படிப்பு: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு


என்ஜினீயரிங் படிப்பு: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 May 2018 4:15 AM IST (Updated: 10 May 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பத்தை தமிழில் பூர்த்தி செய்ய அனுமதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை, 

என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், வக்கீல் பொன்.பாண்டியன் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழகம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-

நடப்பு கல்வியாண்டில் ‘ஆன்லைன்’ மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று கடந்த கல்வி அண்டே அறிவித்து விட்டோம். வெளியூர் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் விண்ணப்பம் கொடுப்பதற்காக சென்னை வந்து செல்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல் களை கருத்தில் கொண்டே ‘ஆன்லைன்’ மூலமாக விண்ணப்பிக்கவும், கலந்தாய்வில் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு விண்ணப்பிக்க ஆங்கில அறிவோ அல்லது கம்ப்யூட்டர் அறிவோ அவசியம் கிடையாது. வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றினாலே எளிதாக விண்ணப்பித்து விடலாம்.

கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, போதிய எண்ணிக்கையில் ஆட்களையும் நியமித்துள்ளோம். எனவே, ஆன் லைன் கலந்தாய்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் முறை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. எனவே ஆன்லைனால் கிராமப்புற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கடந்த மே 3-ந் தேதியில் இருந்து மே 7-ந் தேதி வரை 30 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் மனுதாரர்கள் தரப்பில், ‘ஆன்லைனில் விண்ணப்பிக்க வங்கி கணக்கும், விண்ணப்பத் தொகையை செலுத்த டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு, ‘நெட்பேங்கிங்’ அவசியம் தேவையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்யவேண்டும் என்ற நிலை கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று கூறியிருந்தனர்.

இதையடுத்து நீதிபதிகள், ‘கிராமப்புற மாணவர்கள் பலருக்கு வங்கி கணக்கு கூட கிடையாது. அவ்வாறு வங்கி கணக்கே இல்லாத மாணவர்களிடம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு எப்படி இருக்கும்? இவற்றை பயன்படுத்தி அவர்கள் எப்படி விண்ணப்பிக்க முடியும்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

பின்னர் நீதிபதிகள், ‘இந்த நடைமுறை சிக்கல் உள்ளதால், மாற்று நடவடிக்கையாக விண்ணப்பத்தொகையை ரொக்கம் அல்லது வரைவோலையாக (டிமாண்ட் டிராப்ட்) செலுத்த அனுமதிக்கலாமா? என்பது குறித்தும், விண்ணப்பத்தை தமிழில் பூர்த்தி செய்ய அனுமதி வழங்குவது குறித்தும் அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலிக்க வேண்டும். அதன்பின்னர் எடுக்கப்பட்ட முடிவை இன்று (வியாழக்கிழமை) மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Next Story