மஞ்சள் கரு இல்லாமல் பனீர் வடிவத்தில் முட்டை அறிமுகம்


மஞ்சள் கரு இல்லாமல் பனீர் வடிவத்தில் முட்டை அறிமுகம்
x
தினத்தந்தி 10 May 2018 9:30 PM GMT (Updated: 10 May 2018 8:02 PM GMT)

முட்டையில் மஞ்சள் கருவை நீக்கி, பனீர் வடிவத்தில் முட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

இந்தியாவில் முதன் முறையாக ஈரோட்டை சேர்ந்த எஸ்.கே.எம். முட்டை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் பனீர் வடிவத்தில் முட்டையை அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ சிவ்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் எங்கள் நிறுவனம் சார்பில் 18 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில் 3 லட்சம் முட்டைகளில் மஞ்சள் கரு, வெள்ளை கரு தனித்தனியாக பிரிக்கப்படுகிறது.

இவ்வாறு பிரிக்கப்படும் வெள்ளை கரு பதப்படுத்தப்பட்டு, பனீர் வடிவத்தில் வடிவமைக்கப்படுகிறது. பின்னர் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

முட்டையில் மஞ்சள் கரு நீக்கப்படுவதால் கொழுப்புச்சத்து தவிர்க்கப்படுகிறது. வெள்ளை கரு மட்டும் இருப்பதால் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கும். எனவே சர்க்கரை நோயாளிகளும் இந்த வெள்ளை முட்டையை உணவில் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

இந்த முட்டையை குளிர்சாதன பெட்டியில் 4 டிகிரி செல்சியசில் வைத்தால் 21 நாட்கள் வரை கெட்டுபோகாமல் இருக்கும்.

செயற்கையான முறையில் பிளாஸ்டிக் முட்டைகள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக வெளி வரும் தகவல்கள் தவறானவை. பிளாஸ்டிக் முட்டை என்பது சாத்தியமற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story