மகனை, கதாசிரியர் சவுபா கொலை செய்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்


மகனை, கதாசிரியர் சவுபா கொலை செய்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 11 May 2018 3:45 AM IST (Updated: 11 May 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

மகனை கதாசிரியர் சவுபா கொலை செய்தது ஏன் என்பது குறித்து விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதுரை, 

மதுரை கோச்சடை, டோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சவுபா என்ற சவுந்தரபாண்டி (வயது 55). பிரபல பத்திரிகையாளரான இவர் சீவலப்பேரி பாண்டி படத்தின் கதாசிரியராக பணியாற்றி உள்ளார். இவருடைய மனைவி லதா பூர்ணம், கோவில்பட்டியில் உள்ள அரசுக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

சவுந்தரபாண்டியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லதா பூர்ணம் தனியாக கோவில்பட்டியில் வசித்து வருகிறார். இவர்களுடைய மகன் விவின் (25). போதைக்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தனது மகனை காணவில்லை என்றும், கணவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் லதா பூர்ணம் கடந்த 5-ந்தேதி எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சவுந்தரபாண்டியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் தனது மகனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சவுந்தரபாண்டி உள்பட 3 பேரையும் மதுரை ஜே.எம்.5 கோர்ட்டில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களை 24-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உமா உத்தரவிட்டார்.

அப்போது போலீசார், சவுந்தரபாண்டியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். இதனை பதிவு செய்த நீதிபதி, இன்று(வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கதாசிரியர் சவுந்தரபாண்டிக்கு விவின் ஒரே மகன் என்பதால் அதிகமாக பாசம் காட்டி வளர்த்து வந்தார். ஆனால் விவின் தகாத நண்பர்களுடன் பழக்கம் வைத்து போதைக்கு அடிமையாகி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குடிக்க பணம் கேட்டு தந்தையிடம் தகராறு செய்த விவின், கத்தியால் அவரை குத்த முயற்சி செய்துள்ளார்.

அதேபோல், ரூ.12 லட்சம் மதிப்பிலான காரை ரூ.3 லட்சத்திற்கு விற்று போதை மருந்துகள் வாங்கி உள்ளார். மேலும் கொடைரோட்டை அடுத்துள்ள பள்ளப்பட்டியில் இருக்கும் 45 ஏக்கர் நிலத்தை விற்று தருமாறு விவின் கேட்டுள்ளார். இதற்கு சவுந்தரபாண்டி மறுத்துள்ளார். இது போன்ற பல்வேறு பிரச்சினைகள் நிலவி வந்ததால், மகனை கொலை செய்ய சவுந்தரபாண்டி திட்டமிட்டார். அதன்படி தன் வீட்டில் வேலை செய்யும் பூமி, கனிக்குமார் ஆகியோரை வைத்து கொலை திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சவுந்தரபாண்டி அளித்த தகவலின் அடிப்படையில் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளப்பட்டியில் உள்ள தோட்டத்திற்கு சென்று போலீசார், அரசு அதிகாரிகள் முன்னிலையில் விவினின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

Next Story