பொது அமைதியை குலைக்கும் செய்திகளை சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்


பொது அமைதியை குலைக்கும் செய்திகளை சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 11 May 2018 2:30 AM IST (Updated: 11 May 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

பொது அமைதியை குலைக்கும் செய்திகளை சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு வழிபாடு நடத்துவதற்காகச் சென்ற மூதாட்டியை, அவர் குழந்தைகளை கடத்த வந்திருக்கலாம் என்ற அச்சத்தில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அடித்துக்கொலை செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலும் இதேபோன்ற நிகழ்வு நடந்துள்ளது. தவறான புரிதலால் அப்பாவிகளை பலிவாங்கிய இந்த செயல்கள் துரதிர்ஷ்டவசமானவை.

இவை அனைத்திற்கும் கடந்த சில வாரங்களாக குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவி இருப்பதாக வட மாவட்டங்களில் பரவிவரும் வதந்திகள்தான் காரணம் ஆகும்.

வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், வட மாவட்டங்களில் குழந்தைகள் கடத்தல் கும்பல் ஊடுருவியிருப்பதாக வதந்திகள் பரவிய போதே, அதனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று யூகித்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், குழந்தைகளை கடத்த வட மாநில கும்பல் வந்திருக்கிறது என்பது வதந்தி என்று செய்திக்குறிப்பு வெளியிட்டதுடன் காவல்துறை அதன் கடமையை முடித்துக்கொண்டது. அந்த வகையில் வட மாவட்டங்களில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும்.


இனியாவது தமிழக அரசும், காவல்துறையும் விழித்துக்கொண்டு வதந்திகள் குறித்த மக்களின் அச்சத்தைப் போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரும் தங்களின் சமூகக் கடமைகளை உணர்ந்து பொது அமைதியை குலைக்கும் எந்த செய்தியையும் பகிரக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு உலகத்தர சிகிச்சையையும் அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story