குழந்தை கடத்தல்காரர் என்ற வதந்தியால் மேலும் ஒருவர் அடித்துக்கொலை


குழந்தை கடத்தல்காரர் என்ற வதந்தியால் மேலும் ஒருவர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 10 May 2018 10:15 PM GMT (Updated: 10 May 2018 9:10 PM GMT)

பழவேற்காடு பகுதியில் குழந்தை கடத்தல்காரர் என சந்தேகப்பட்டு ஒருவரை கிராமத்தினர் அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனர்.

பொன்னேரி, 

பழவேற்காடு பகுதியில் குழந்தை கடத்தல்காரர் என சந்தேகப்பட்டு ஒருவரை கிராமத்தினர் அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வடமாநில கும்பல்கள் நடமாட்டம் இருப்பதாக சில நாட்களாக வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின.

இதனால் பீதியடைந்த மக்கள் ஆங்காங்கே வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், பிச்சை எடுப்பவர்கள், திருநங்கைகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று சந்தேகப்படுபவர்களை எல்லாம் கடுமையாக தாக்கி வருகின்றனர். இதில் சில இடங்களில் பாதிக்கப்பட்ட சிலர் உயிரையும் இழந்துள்ளனர்

சென்னையை அடுத்த பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி அம்மாள் (வயது 65). இவர் மலேசியாவில் இருந்துவந்த மோகன்குமார், சந்திரசேகரன் உள்ளிட்ட உறவினர்களுடன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஜமுனாமரத்தூர் செல்லும் வழியில் உள்ள குலதெய்வமான மாரியம்மன் கோவிலுக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.

போளூரை அடுத்த தம்புகொட்டான் பாறை என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு, அங்கு வீட்டுக்கு வெளியே குழந்தையுடன் நின்றிருந்த நீலம்மாள் என்ற பெண்ணிடம் கோவிலுக்கு செல்லும் வழியை விசாரித்தனர். அப்போது மலேசியாவில் இருந்து வாங்கிவந்த சாக்லெட்டை அந்த குழந்தைக்கு ஆசையாக கொடுத்தனர்.

அது மயக்க மருந்து கலந்த சாக்லெட்டாக இருக்கலாம், இவர்கள் குழந்தை கடத்தும் கும்பலாக இருக்கலாம் என அந்த பகுதியினர் கருதினர். ஆவேசமடைந்த அவர்கள் ருக்மணியம்மாள் உள்பட காரில் இருந்த 5 பேரையும் சரமாரியாக தாக்கினார்கள். குழந்தை கடத்தவரவில்லை என்று கூறியும் அந்த கும்பல் அதை கேட்கவில்லை.

அவர்கள் பயந்து காரை வேகமாக எடுத்துச்செல்ல, சிலர் மோட்டார்சைக்கிளில் வந்து வழிமறித்து தாக்கினர். இதில் 5 பேரும் மயங்கிவிழுந்தனர். தகவல் அறிந்த போளூர் போலீசார் விரைந்துவந்து 5 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதில் ருக்மணியம்மாள் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

திருவள்ளூர் மாவட்டத்திலும் குழந்தை கடத்தும் கும்பல் சுற்றித்திரிவதாக தகவல் பரவியதால் அப்பாவிகள் பலர் கிராமத்தினரால் தாக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் இந்த தாக்குதல் சம்பவங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. பொன்னேரியை அடுத்த ஆலாடு பகுதியில் கடந்த 7-ந்தேதி குழந்தை கடத்தும் கும்பல் சுற்றுவதாக பரவிய தகவலால் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை கடுமையாக தாக்கினர்.

அதேபோல் கடந்த 8-ந்தேதி கோளுர் கிராமத்தில் மது அருந்திவிட்டு வந்தவரை சிலர் வழிமறித்து தாக்கினர். பின்னர் அவரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறைவைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த பொன்னேரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறை வைக்கப்பட்டிருந்தவரை மீட்டு விசாரித்தபோது ஆவடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சந்திரன்(45) என்பது தெரியவந்தது. இதனால் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் பழவேற்காடு பகுதியில் சுற்றித்திரிந்த ஆண் ஒருவரை குழந்தை கடத்தல்காரர் என கிராமத்தினர் சந்தேகப்பட்டு மடக்கிப்பிடித்தனர். அவரிடம் கிராம மக்கள் விசாரித்தனர். ஆனால் அவர் சம்மந்தம் இல்லாமல், முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

இதனால் அவர் மீது மேலும் சந்தேகம் அடைந்த மக்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். ஏற்கனவே பலவீனமாக இருந்த அவர் அடி தாங்கமுடியாமல் மயங்கிவிழுந்தார். சிறிது நேரத்தில் அவரது உயிரும் பிரிந்தது. உடனே மக்கள் அவரது உடலை ஒரு கயிற்றில் கட்டி பழவேற்காடு ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் சுவரில் கட்டித் தொங்கவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பொன்னேரி காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜா, திருப்பாலைவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேணுகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பாலத்தில் தொங்கிய பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், கடந்த 2 வருடங்களாக பொன்னேரி பகுதியில் பல்வேறு தெருக்களில் சுற்றித்திரிந்தவர் என்பதும் தெரியவந்தது. இதன் காரணமாகவே அவர் சம்பந்தம் இல்லாமல் பதில் சொன்னதும், சந்தேகம் வலுத்து கிராமத்தினர் அடித்துக் கொன்றதும் தெரிந்தது.

திருப்பாலைவனம் போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து, அவரை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டவர்களை தேடி வருகின்றனர்.

தமிழக, ஆந்திர எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியிலும் குழந்தை கடத்தும் கும்பல் நுழைந்துள்ளதாக வதந்தி பரவியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உருட்டுக்கட்டையுடன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அண்ணாநகர் பகுதியில் உள்ள முட்புதரில் ஏதோ சத்தம் வந்தது. குழந்தை கடத்தும் கும்பல் முட்புதரில் மறைந்திருக்கலாம் என்று எண்ணி மண்எண்ணெய் ஊற்றி முட்புதரை தீவைத்து எரித்தனர். ஆனால் அதில் ஆட்கள் யாரும் இல்லை.

குழந்தை கடத்தல் கும்பல் பற்றிய வதந்தியால் அப்பாவிகள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்துவருவதாலும், மக்களிடம் உள்ள பயத்தை போக்கவும் போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் நித்தியானந்தம், குமரன் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்து வருகின்றனர்.

வீண் வதந்திகளை நம்பவேண்டாம். உங்களுக்கு பாதுகாப்பாக நாங்கள் இருக்கிறோம். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் யாராவது நடமாடினால் அவரை தாக்க வேண்டாம், இதுபற்றி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் கல்பாக்கம் போலீசார் இன்ஸ்பெக்டர் கண்ணையன் தலைமையில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதேபோல திருக்கழுக்குன்றம் போலீசாரும், அணைக்கட்டு போலீசாரும், சதுரங்கபட்டினம் போலீசாரும் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.

Next Story