‘சட்டத்தைக் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று’ கமல்ஹாசன்
‘சட்டத்தைக் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று’ என்று கமல்ஹாசன் கூறிஉள்ளார். #KamalHaasan
சென்னை,
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வட மாநில கும்பல் களின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வருகின்றன.
சமூக வலைத்தளமான வாட்ஸ்-அப், முகநூல் போன்றவற்றில் பரவும் இந்த வதந்திகளால் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் சந்தேகத்தின் பேரில் பொதுமக்களால் தாக்கப்பட்டு உள்ளனர். இதுபோன்ற தாக்குதல்கள் அந்த மாவட்டங்களில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என்று கருதி சென்னையில் இருந்து கோவிலுக்கு சென்றவர்களை கிராம மக்கள் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியதும், இதில் ஒரு பெண் பலியான சம்பவமும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தது. இதுதொடர்பாக போலீஸ் விசாரித்து வருகிறது. சமீப காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் ‘சட்டத்தைக் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று’ என்று கமல்ஹாசன் கூறிஉள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம். சட்டத்தை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று. காவல்துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும் என தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story