20 குழந்தைகள் கடத்தப்பட்டதாக ‘வாட்ஸ்-அப்’ மூலம் வதந்தி பரப்பியவர் கைது


20 குழந்தைகள் கடத்தப்பட்டதாக ‘வாட்ஸ்-அப்’ மூலம் வதந்தி பரப்பியவர் கைது
x
தினத்தந்தி 11 May 2018 10:45 PM GMT (Updated: 11 May 2018 8:27 PM GMT)

செய்யாறு அருகே 20 குழந்தைகள் கடத்தப்பட்டதாக ‘வாட்ஸ்-அப்’ மூலம் வதந்தி பரப்பிய கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

செய்யாறு, 

செய்யாறு அருகே 20 குழந்தைகள் கடத்தப்பட்டதாக ‘வாட்ஸ்-அப்’ மூலம் வதந்தி பரப்பிய கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா புரிசை கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகன் வீரராகவன் (வயது 29), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி அலமேலு என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

கடந்த 2-ந்தேதி மும்முனி கிராமத்திற்கு வீரராகவன் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். ஓய்வு நேரத்தில் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

அப்பதிவில் வீரராகவன், ‘நான் செய்யாறு அருகே புரிசை கிராமத்தில் இருந்து பேசுகிறேன். செய்யாறு பக்கத்தில் அதிகமாக குழந்தைகளை கடத்துகிறார்கள். இன்று இரவு பாராசூர் என்ற கிராமத்தில் 2 குழந்தைகளை தூக்கிட்டு போய்விட்டனர். ஏழியனூரில் வடமாநில கும்பல் 2 குழந்தைகளை கடத்திவிட்டனர். தாங்கல், உத்திரமேரூரில் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். அதனால் உங்கள் குழந்தைகளை நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும். செய்யாறு அருகே விநாயகபுரம் என்ற ஊரில் இந்திகாரனுங்க ஐஸ்பெட்டிக்குள் வைத்து குழந்தைகளை தூக்கி சென்றனர். பொதுமக்கள் துரத்தியதால் விட்டுட்டு அவர்கள் ஓடிவிட்டனர். இதுவரை செய்யாறு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்தி சென்றுள்ளனர். வேலை முக்கியமில்லை. குழந்தை தான் முக்கியம். குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள். அனைவரும் உஷாராக இருங்கள். முடிந்தவரை இதனை ஷேர் செய்து குழந்தைகளை காப்பாற்றுங்கள், நன்றி’ என்று கூறியபடி இந்த வீடியோ பதிவு நிறைவு பெறுகிறது.

இந்த வீடியோ ‘வாட்ஸ்-அப்’ மூலமாக கடந்த ஒரு வாரமாக பரவி வந்தது. இந்த தகவலில் உண்மை தன்மை உள்ளதா? என யாரும் விசாரிக்காமல், அதை மற்றவர்களுக்கு ஷேர் செய்ததால் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல அது பரவி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் பரவலாக வடமாநிலத்தவர்கள் வந்துள்ளதாகவும், உடல் உறுப்புக்காக குழந்தைகள் கடத்தப்படுவதாகவும் தகவல் பரவி கிராமப்புறங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர், தமிழ்மொழி தெரியாதவர்கள் அறிமுகமில்லாத நபர்களை கண்டவுடன் பொதுமக்கள் தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.

அதன்தொடர்ச்சியாகவே போளூர் கிராமத்தில் குல தெய்வ கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த ருக்மணி அம்மாள் மற்றும் குடும்பத்தினரை ஊர் பொதுமக்கள் தாக்கியதில் ருக்மணி அம்மாள் பரிதாபமாக இறந்தார். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்களின் இந்த செயல்களை தடுக்கும் வகையில், சமூக வலைதளத்தில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார் ‘வாட்ஸ்-அப்’ மூலம் வீடியோவில் வதந்தி பரப்பிய வீரராகவனை கைது செய்தனர். அவர் மீது 507, 505(1) (பி) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் வீரராகவன் செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story