மதுரவாயலில் உணவு விடுதி உரிமையாளர் வீட்டில் 25 பவுன் நகைகள் திருட்டு


மதுரவாயலில் உணவு விடுதி உரிமையாளர் வீட்டில் 25 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 12 May 2018 3:45 AM IST (Updated: 12 May 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

மதுரவாயலில் உணவு விடுதி உரிமையாளர் வீட்டில் 25 பவுன் நகைகள், விலை உயர்ந்த கேமராவை திருடிச்சென்ற மர்மநபர்கள், மோப்ப நாய் மூலம் போலீசாரிடம் சிக்காமல் இருக்க மிளகாய் பொடியை தூவி சென்று உள்ளனர்.

பூந்தமல்லி, 

மதுரவாயலில் உணவு விடுதி உரிமையாளர் வீட்டில் 25 பவுன் நகைகள், விலை உயர்ந்த கேமராவை திருடிச்சென்ற மர்மநபர்கள், மோப்ப நாய் மூலம் போலீசாரிடம் சிக்காமல் இருக்க மிளகாய் பொடியை தூவி சென்று உள்ளனர்.

மதுரவாயல் ஆலப்பாக்கம், மெட்ரோ நகர், 4-வது அவென்யூவை சேர்ந்தவர் டெம்பிள் வில்லியம்(வயது 47). இவர், வளசரவாக்கத்தில் சொந்தமாக உணவு விடுதி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர், வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் அசாம், மேகாலயா போன்ற வெளி மாநிலங்களுக்கு கோடை சுற்றுலா சென்று விட்டார்.

நேற்று உணவு விடுதி மேலாளர் சுரேஷ், டெம்பிள் வில்லியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து டெம்பிள் வில்லியத்துக்கும், மதுரவாயல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். டெம்பிள் வில்லியம் குடும்பத்துடன் சுற்றுலா சென்று இருப்பதை தெரிந்து கொண்ட மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் விலை உயர்ந்த கேமரா ஆகியவற்றை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

மேலும் கொள்ளையர்கள், மோப்ப நாய் மூலம் போலீசாரிடம் சிக்காமல் இருக்க பீரோவின் உள்ளே மற்றும் வீட்டின் உள்புறங்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்று உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சுற்றுலா சென்றுள்ள டெம்பிள் வில்லியம் திரும்பி வந்த பிறகே எவ்வளவு நகைகள் திருட்டு போனது? வேறு ஏதெனும் திருட்டு போய் உள்ளதா? என்பது போன்ற முழு விவரங்களும் தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story