உலக செவிலியர் தினம் இன்று கொண்டாட்டம்: மத்திய - மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை
உலக செவிலியர் தினம் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி கவுரவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இங்கிலாந்தில் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் 12-5-1820-ம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். இறையருளால் தனக்கு இடப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையைத் தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அப்பணியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நவீன தாதியியல் முறையை உருவாக்கி செவிலியர் பயிற்சிப் பள்ளியை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொடங்கினார். அவர் பிறந்த மே 12-ம் நாளே உலக செவிலியர் தினமாகும்.
செவிலியர் தினத்தின் முக்கியத்துவத்தை அறியாத தமிழக முதல்-அமைச்சர், கடந்த 10-ந் தேதியே செவிலியர் தினத்துக்கு வாழ்த்துக் கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. செவிலியர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, செவிலியர் தினத்தன்று உரிய முறையில் கவுரவிப்பது தான் அவர்களுக்கு நாம் செய்யும் கடமையாகும்.
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் வழியில் தொடர்ந்து தொண்டாற்றி வரும் செவிலியர்களைத் தேர்வு செய்து, மத்திய - மாநில அரசுகள் மே 12-ம் நாளில் அவர்களது பணிப் பாதுகாப்பை உறுதிசெய்து, ஊதிய உயர்வுகளை முறையாக வழங்கி அவர்களைக் கண்ணியப்படுத்தி கவுரவிப்பதே நாம் வழங்கும் நன்றிக் கடனாகும்.
புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வரும் அனைத்து செவிலியர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை ம.தி.மு.க. சார்பில் உரித்தாக்குகின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story