அமைச்சர் செல்லூர் ராஜூ வருத்தம் தெரிவித்தார் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என விளக்கம்


அமைச்சர் செல்லூர் ராஜூ வருத்தம் தெரிவித்தார் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என விளக்கம்
x
தினத்தந்தி 13 May 2018 4:15 AM IST (Updated: 13 May 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

ஆச்சி குறித்த பேச்சுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ வருத்தம் தெரிவித்தார்.

மதுரை, 

ஆச்சி குறித்த பேச்சுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ வருத்தம் தெரிவித்தார். மேலும் தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

மதுரையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “தமிழகத்தில் ரஜினி ஆட்சியை பிடிக்க முடியாது, வேண்டுமென்றால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம்“ என்றார். அவரது இந்த பேச்சுக்கு, காரைக்குடி நகரத்தார் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதல்- அமைச்சருக்கு மனுவும் அனுப்பினர்.

இந்த நிலையில் இந்த சர்ச்சை பேச்சு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மதுரையில் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க., பெண்களை தாயாக, தெய்வமாக மதிக்கிற இயக்கம். அந்த இயக்கத்தின் வழி வந்த தான் ஒரு போதும் பெண்களை தவறாக பேச மாட்டேன். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இதனை தான் எங்களுக்கு போதித்து உள்ளார்கள்.

எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. அதற்காக உண்மையில் நான் வருந்துகிறேன். எனக்கு யாரையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை. ஆச்சி என்பது மனோரமா ஆச்சியைத் தான் கூறினேன். சினிமாவில் மனோரமா ஆச்சியை தாயாக பார்க்கிறார்கள்.

என்னுடன் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். நான் எந்த சமூகத்தையும் இழிவாகப் பேசுபவன் அல்ல. சாதி-மத பாகுபாடின்றி பழகுபவன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story