மெட்ரோ ரெயில் பாதைகளில் பாதுகாப்பு ஆணையர் நாளை ஆய்வு


மெட்ரோ ரெயில் பாதைகளில் பாதுகாப்பு ஆணையர் நாளை ஆய்வு
x
தினத்தந்தி 13 May 2018 3:45 AM IST (Updated: 13 May 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் பாதைகளில் பாதுகாப்பு ஆணையர் நாளை (திங்கட்கிழமை) ஆய்வு செய்கிறார்.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில் சென்னையில் நடந்து வரும் சுரங்க ரெயில் பாதை பணியை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் நாளை (திங்கட்கிழமை) ஆய்வு செய்கிறார்.

இந்த ஆய்வு குறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

ஷெனாய் நகர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு நாளை காலை 9.30 மணிக்கு வரும் பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.மனோகரன், ஆய்வு பணிகள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளிக்கிறார். காலை 10.30 மணிக்கு ஷெனாய் நகர்-நேரு பூங்கா 2-வது வழிப்பாதையை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து நேரு பூங்கா- எழும்பூர்- சென்டிரல் இடையே நாளை மறுதினம் (15-ந் தேதி) வரை ஆய்வு பணியில் ஈடுபடுகிறார்.

தொடர்ந்து வரும் 18 மற்றும் 19-ந் தேதிகளில் சைதாப்பேட்டை- ஏ.ஜி-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே மெட்ரோ ரெயில் பாதையை ஆய்வு செய்கிறார். இந்த பாதைகளின் தரம், நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. பின்னர் ஆய்வை முடித்துவிட்டு பாதுகாப்பு ஆணையர் பெங்களூரு திரும்பி செல்வார்.

இதனைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் சைதாப்பேட்டை- ஏ.ஜி-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) பாதையில் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற அண்ணா சாலை பகுதி மக்களின் நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். மெட்ரோ ரெயில் நிறுவன சேவைக்காக 21 ரெயில் நிலையங்கள் சுரங்கத்திலும், 19 ரெயில் நிலையங்கள் உயர்த்தப்பட்ட பாதையிலும் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது வரை 7 சுரங்கப்பாதையிலும், 13 உயர்த்தப்பட்ட பாதையிலும் உள்ள ரெயில் நிலையங்களில் சேவை நடந்து வருகிறது. மீதம் உள்ள 14 சுரங்க ரெயில் நிலையங்களிலும், 6 உயர்த்தப்பட்ட பாதையில் உள்ள ரெயில் நிலையங்களிலும் பணிகள் நடந்து வருகிறது.

ஆய்வு செய்யப்பட்ட பாதையில் ரெயில் இம்மாத இறுதியில் இயக்கப்பட்டால், கூடுதலாக சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள எழும்பூர், சென்டிரல் மற்றும் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, ஏ.ஜி-டி.எம்.எஸ் ஆகிய 6 சுரங்க ரெயில் நிலையங்களிலும் சேவை விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story