‘வால்மார்ட்’ பன்னாட்டு நிறுவனத்தை தடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய வணிகர்கள் பாதிக் கப்படுவார்கள் என்பதால், ‘வால்மார்ட்’ பன்னாட்டு நிறுவனத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
இந்திய வணிகர்கள் பாதிக் கப்படுவார்கள் என்பதால், ‘வால்மார்ட்’ பன்னாட்டு நிறுவனத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்லைன் வணிக நிறுவனமான பிலிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை அமெரிக்காவின் ‘வால்மார்ட்’ நிறுவனம் ரூ.1.10 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளது. வியக்க வைக்கும் வணிகமாக இது தோன்றினாலும், இதன் பின்னணியில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். இந்திய வணிகர் களை பாதிக்கும் இந்த வணிக ஒப்பந்தத்தை மத்திய அரசு தடுக்காதது கண்டிக்கத்தக்கது.
பிலிப்கார்ட் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வணிக நிறுவனமாக இருந்தாலும்கூட அது தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை லாபம் ஈட்ட முடியவில்லை. மாறாக, இதுவரை ரூ.24 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் வாடிக்கையாளர்களை இழுப்பதற்காக பெருமளவில் தள்ளுபடி கொடுத்தது தான்.
இப்படிப்பட்ட நிறுவனத்தின் பங்குகளை, அந்த நிறுவனமே எதிர்பார்க்க முடியாத அளவுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுத்து வால்மார்ட் நிறுவனம் வாங்கியிருப்பதை அறியாமையின் அடையாளமாகவோ, முட்டாள் தனமாகவோ பார்க்கமுடியாது. மாறாக, 125 கோடி நுகர்வோரைக் கொண்ட இந்திய சந்தையை வளைப்பதற்காக செய்யப்படும் முதற்கட்ட முதலீடாகத் தான் பார்க்க வேண்டும்.
பிலிப்கார்ட் நிறுவனத்தை தளமாக பயன்படுத்திக் கொண்டு, நுகர்வோருக்கு கூடுதலான தள்ளுபடிகளை வழங்கி தங்களின் வாடிக்கையாளர்களாக மாற்ற வேண்டும்; அதன்பிறகு ஒட்டுமொத்த சந்தையையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது தான் வால்மார்ட்டின் திட்டம்.
ஆன்லைன் வணிகம் அதிகரித்தால், தமிழகத்தில் உள்ள 21 லட்சம் சில்லரை வணிகர்கள் உட்பட கோடிக்கணக்கான வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். இது நாட்டின் கிராமப்பொருளாதாரத்தை முற்றிலுமாக சிதைத்துவிடும். இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.
எனவே, ‘வால்மார்ட்’ போன்ற பன்னாட்டு வணிக நிறுவனங்கள் கொல்லைப்புற வழியாக இந்தியாவில் நுழைவதை தடுத்து நிறுத்த வேண்டும். அது சட்டப்படி சாத்தியமில்லை என்றால் அந்நிறுவனங்களுக்கு கடுமையான வணிக மற்றும் கொள்முதல் கட்டுப்பாடுகளை விதித்து, அவற்றால் இந்திய வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய ஆட்சியாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story