13-ம் நூற்றாண்டில் இருந்து ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தகவல்


13-ம் நூற்றாண்டில் இருந்து ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 13 May 2018 4:15 AM IST (Updated: 13 May 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

முருகப்பெருமானின் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் உள்ளது.

பழனி, 

பழனி முருகன் கோவிலுக்கு புதிய சிலை செய்ததில் நடந்த மோசடி வழக்கில் 13-ம் நூற்றாண்டில் இருந்து தற்போது வரை கோவிலில் பராமரிக்கப்படும் ஆவணங்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

முருகப்பெருமானின் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மூலவர் சன்னதியில் போகர் என்னும் சித்தரால் நவபாஷாணம் மூலம் உருவாக்கப்பட்ட முருகப்பெருமான் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பழனி முருகன் கோவிலுக்கு ஐம்பொன்னால் ஆன புதிய முருகன் சிலை செய்ததில் மோசடி நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பழனி கோவில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிலை செய்ததில் மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல சிலர் முடிவு செய்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஸ்தபதி முத்தையா, அப்போது பழனி முருகன் கோவில் இணை ஆணையராக இருந்த கே.கே.ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு தமிழக அரசால் மாற்றப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரணை செய்த ஐகோர்ட்டு மீண்டும் இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து 2-வது கட்டமாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு கருணாகரன் தலைமையிலான குழுவினர் மீண்டும் பழனிக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் சிலை மோசடி வழக்கில் மீண்டும் சாட்டையை சுழற்றியுள்ளார். அவர் தலைமையிலான குழுவினர் நேற்று பழனிக்கு வந்தனர். அவர்களுடன் சென்னை ஐ.ஐ.டி.யில் உலோகவியல் துறை பேராசிரியரான முருகைய்யா தலைமையிலான குழுவினரும் வந்தனர். பழனி பாலாறு இல்லத்தில் அதிகாரிகள் தங்கினர். பின்னர் காலை 10 மணியளவில் பேராசிரியர் முருகைய்யா தலைமையிலான குழுவினர் மலைக்கோவிலுக்கு சென்று ஐம்பொன் சிலையை ஆய்வு செய்தனர்.

அப்போது, சிலையில் என்னென்ன உலோகங்கள் கலக்கப்பட்டுள்ளன. எந்த விகிதத்தில் கலக்கப்பட்டுள்ளது. சிலை நிறம் மாறியதற்கான காரணம் என்ன? என்பது போன்ற பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

மலைக்கோவில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள ஐம்பொன் சிலையை சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களின் பரிந்துரைப்படி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம். பழனி முருகன் கோவிலில் 13-ம் நூற்றாண்டில் இருந்து தற்போது வரை பராமரிக்கப்படும் ஆவணங்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கோவில் இணை ஆணையர் உள்பட அனைத்து அலுவலர்களிடமும் விசாரணை நடத்தி உள்ளோம். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரிடம் விசாரிக்க உள்ளோம். அதில் அவர்கள் குற்றம் செய்தது நிரூபணமானால் அவர்களும் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. இதுதவிர மலைக்கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில்களில் உள்ள உற்சவர் சிலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. விசாரணை நாளையும் (அதாவது இன்று) நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story