சந்திரயான்–2 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோ தலைவர் சிவன்


சந்திரயான்–2 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோ தலைவர் சிவன்
x
தினத்தந்தி 14 May 2018 4:45 AM IST (Updated: 14 May 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

சந்திரயான்–2 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். #Chandrayaan-2

கன்னியாகுமரி

இஸ்ரோ தலைவர் சிவன் தனது சொந்த ஊரான நாகர்கோவில் சரக்கல்விளையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இஸ்ரோ இந்த ஆண்டு பலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளது. அதில் முக்கியமான ஒன்று ஜிசாட்–29 எனும் செயற்கைகோளை விண்ணுக்கு செலுத்துவது. இதன் சிறப்பு அம்சம் என்னவெனில், இந்த செயற்கைகோளை ஜி.எஸ்.எல்.வி.மார்க்3–2 என்ற மிகப்பெரிய ராக்கெட் மூலமாக விண்ணுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த செயற்கைகோளை அதிவேக இணையதள பயன்பாட்டுக்காக இஸ்ரோ அனுப்ப உள்ளது. அடுத்தகட்டமாக ஜிசாட்–7ஏ, எமி சாட், ஓசன் சாட் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த உள்ளோம்.

ஜி.எஸ்.எல்.வி.மார்க்3–2 என்பது ஜி.எஸ்.எல்.வி.மார்க் 3 ராக்கெட்டின் 2–ம் கட்ட வடிவமைப்பு. மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் வகையில் இந்த ராக்கெட்டை உருவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நிறைய தொழில்நுட்பங்களை உருவாக்கவேண்டி உள்ளது.

ஏற்கனவே ஒருமுறை இதுபோன்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணுக்கு சென்று திரும்பி வந்த ராக்கெட் கடலில் விழுவது போன்று வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது, இந்த ராக்கெட் பத்திரமாக தரையில் வந்திறங்கும்படி உருவாக்க பணிகள் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு 10 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். அதில் 2 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுவிட்டன. அடுத்த ஆண்டு 13 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும்.

சந்திரயான்–2 விண்கலத்தை அனுப்புவதற்கான பணி 50 சதவீதத்துக்கும் மேல் முடிந்துவிட்டது. அடுத்த ஆண்டில் விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மங்கள்யான்–2 குறித்து பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளது. அந்த தகவல்களை விஞ்ஞானிகளுக்கு அனுப்பி அவர்களின் கருத்துகள் பெறப்படும். பின்னர், அவை பரிசீலிக்கப்பட்டு திட்டத்தின் இறுதி வடிவம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அரசின் ஒப்புதலுக்கு பிறகு, ஆய்வு நடைபெற்று திட்டப்பணிகள் நடைபெறும். விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் பற்றி பல ஆய்வுகள் நடத்தி வருகிறோம். இதில் சுற்றுச்சூழல் பாதிப்பு, மனிதனின் பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்யவேண்டி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story