கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்துக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் முதல்-அமைச்சர் பழனிசாமி


கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்துக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் முதல்-அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 14 May 2018 5:15 AM IST (Updated: 14 May 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்துக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalanisamy

சேலம், 

சேலம் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏ.வி.ஆர்.ரவுண்டானா பகுதியில் ரூ.82.27 கோடியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அனைவரும் சிரமப்பட்டு வந்தனர்.

இதை கருத்தில் கொண்டு சேலம் மாநகரில் ஏ.வி.ஆர்.ரவுண்டானா, திருவாக்கவுண்டனூர் ஆகிய பகுதியில் புதிய மேம்பாலங்கள் அமைக்கவேண்டும் என்று முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தேன். அப்போது அவர், தேசிய நெடுஞ்சாலையில் எப்படி பாலம் கட்டமுடியும்? அதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டுமே என்று கூறினார்.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக நான் இருந்தபோது, மத்திய தரைவழி போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியை நேரில் சந்தித்து அனுமதி பெற்றதை தொடர்ந்து சேலத்தில் ஏ.வி.ஆர்.ரவுண்டானா, திருவாக்கவுண்டனூர், இரும்பாலை பிரிவு ரோடு ஆகிய 3 இடங்களில் ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்து மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. திருவாக்கவுண்டனூர் மேம்பாலம் கட்டி திறக்கப்பட்டதை தொடர்ந்து இன்று ஏ.வி.ஆர்.ரவுண்டானா மேம்பாலமும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோல், சேலம் 5 ரோட்டில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கவும், அணைமேடு மற்றும் முள்ளுவாடி கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கும் ரூ.320 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனுமதி வழங்கினார். தமிழகத்தில் சேலம் தவிர வேறு எந்த மாவட்டத்திற்கும் மேம்பாலம் கட்ட ஒரே நேரத்தில் இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்த வரலாறு கிடையாது.

சேலம்-சென்னை இடையே புதிதாக 8 வழி பசுமை சாலை திட்டம் அமைய உள்ளது. ஒரு நாட்டில் உள்கட்டமைப்பு வசதி இருந்தால்தான் தொழில்வளம் பெருகும். தொழில் வளம் பெருகினால் படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். பசுமை வழி சாலை மூலம் எரிபொருள், நேரம் மிச்சமாகும்.

சேலத்தில் நவீன பஸ்நிலையம் (பஸ்போர்ட்) அமைக்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய பாதுகாப்பு படைக்கு தேவையான ராணுவ தளவாட உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலை சேலம் மாவட்டத்தில் அமைய இருக்கிறது. இதனால் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தமிழகத்தில் குடிமராமத்துப்பணி மூலம் நீர்நிலைகள் தூர்வாரியும், ஏரி, குளங்கள் ஆழப்படுத்தப்பட்டும் வருகிறது. விவசாய மக்கள் பயன்பெறும் வகையில் தடுப்பணைகள் கட்ட ரூ.1,000 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ரூ.350 கோடியில் விரைவில் அந்த பணிகள் தமிழகம் முழுவதும் தொடங்கும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அந்த வகையில் 2-ம் கட்டமாக குடிமராமத்து பணிக்கு 1514 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளை வைத்து அந்த பணிகளை செய்ய அரசு முடிவு செய்து இருக்கிறது.

தமிழகம் நீர் ஆதாரத்திற்கு அண்டை மாநிலங்களை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து மத்திய நீர்ப்பாசனத்துறை மந்திரி நிதின் கட்காரியிடம் ஆலோசனை நடத்தினேன். அப்போது, அவர் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறினார்.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் தெலுங் கானா, ஆந்திரா வழியாக தமிழகத்துக்கு வந்தடையும். இதன் மூலம் தமிழகத்துக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். கோதாவரியில் இருந்து தற்போது கடலில் வீணாக கலக்கும் இந்த தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்கும்போது, நமது விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன்பாளையம் முதல் கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார்பாறை வரை 56½ மைல் தூரம் பாய்ந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்துக்கு பாசனம் அளித்து வருகிறது காலிங்கராயன் வாய்க்கால். இந்த வாய்க்கால் கி.பி.1270-ம் ஆண்டு வெட்ட தொடங்கப்பட்டு 1282-ம் ஆண்டு பாசனத்துக்கு திறக்கப்பட்டது.

கொங்கு மண்டல பகுதியின் நிர்வாக பொறுப்பில் இருந்த காலிங்கராயன் அவருடைய சொந்த முயற்சியால் 12 ஆண்டுகள் தவம்போல் அணை கட்டி, வாய்க்கால் வெட்டும் பணியை முடித்தார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு காலிங்கராயன் மணிமண்டபம் மற்றும் வெண்கல சிலை அமைக்க உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்பேரில் காலிங்கராயன்பாளையத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் அழகிய மணிமண்டபம் மற்றும் 7 அடி உயரம் உள்ள காலிங்கராயன் வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.

விழாவில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய மண்டபத்தை திறந்து வைத்தார். அவர் ரிமோட்டை இயக்கி காலிங்கராயன் முழுஉருவ சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் காலிங்கராயன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஈரோடு மாவட்டத்தில் ரூ.135 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமி தொடங்கி வைத்தார்.

Next Story