தலைமறைவானவர்களை பிடிக்க உறவினர் வீடுகளில் தேடுதல் வேட்டை போலீசார் நடவடிக்கை தீவிரம்
தலைமறைவானவர்களை பிடிக்க உறவினர் வீடுகளில் தேடுதல் வேட்டை போலீசார் நடவடிக்கை தீவிரம்
போளூர்,
போளூர் அருகே குழந்தை கடத்தல் கும்பல் என கருதி சென்னை பெண்ணை கொன்ற வழக்கில் தலைமறைவானவர்களை பிடிக்க உறவினர் வீடுகளில் போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே களியம் என்ற கிராமத்தில் கடந்த 9-ந் தேதி குலதெய்வ கோவிலுக்கு வந்தபோது சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி அம்மாள் (வயது 65), மோகன்குமார் உள்பட 5 பேரை குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் ருக்மணி அம்மாள் பரிதாபமாக இறந்தார்.
மற்றவர்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் இதுவரை 36 பேரை கைது செய்துள்ளனர். போலீசாருக்கு கிடைத்த வீடியோ காட்சிகளை ஆதாரமாக கொண்டு இதில் தொடர்புடையவர்களை வீடு, வீடாக தேடி வருகின்றனர். கைது நடவடிக்கைக்கு பயந்து கிராமத்தினர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். சில வீடுகளில் பெண்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரையும் விடப்போவதில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் போலீசாருக்கு பயந்து நேற்று 4-வது நாளாக கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த நிலையில் பொதுமக்களால் தாக்கப்பட்ட மோகன்குமார் போளூர் போலீஸ் நிலையம் சென்று விசாரணை குறித்து கேட்டறிந்தார்.
தற்போது தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தி உள்ளனர். அதன்படி தாக்குதல் நடத்திய கிராம மக்களின் விவரங்களை சேகரித்து யாரெல்லாம் தலைமறைவாக உள்ளனர் என்ற பட்டியலை தயாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் இந்த பட்டியலை வைத்து இவர்களின் உறவினர்கள் வீடுகள் எங்கெங்கு உள்ளது? என்ற விவரத்தையும் சேகரித்து வருகின்றனர்.
இக்கிராம மக்களிடம் பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர் என அவர்களின் பட்டியலும் தயார் செய்யப்பட்டு வேலூர், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story