கோவையில் அடுத்த மாதம் இளைஞர் எழுச்சி மாநாடு மக்கள் நீதி மய்யம் நிர்வாகி தகவல்


கோவையில் அடுத்த மாதம் இளைஞர் எழுச்சி மாநாடு மக்கள் நீதி மய்யம் நிர்வாகி தகவல்
x
தினத்தந்தி 13 May 2018 8:15 PM GMT (Updated: 13 May 2018 8:15 PM GMT)

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது.

சென்னை, 

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கோவையில் அடுத்த மாதம் இளைஞர் எழுச்சி மாநாடு நடத்த உள்ளதாக கட்சி நிர்வாகி தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு உயர்நிலைக்குழு உறுப்பினர் ஏ.ஜி.மவுர்யா தலைமை தாங்கினார். உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, ஆர்.ரங்கராஜன், சி.கே.குமரவேல் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் தொடங்கிய ‘மய்யம் விசில்’ செயலி மூலம் மக்கள் கவனத்தை ஈர்ப்பது, கட்சியின் வளர்ச்சிப்பணிகள், உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஆகஸ்டு 15-ந் தேதி நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் பங்கேற்று மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும். ஜூன் மாதம் கோவையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தினர் திரளாக கலந்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் கட்சிக்காக கடுமையாக உழைப்பவர்களுக்கு பதவிகள், பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் உயர்நிலைக்குழு உறுப்பினர் சி.கே.குமரவேல் நிருபர்களிடம் கூறுகையில், மக்கள் நலனில் அக்கறை கொண்டு கமல்ஹாசன் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவருடைய கரங்களை மக்கள் மேலும் வலுப்படுத்தவேண்டும். திருப்பூர், நீலகிரி மற்றும் கோவைக்கு அடுத்த மாதம் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். இந்த பயணத்தை ஒட்டி இளைஞர் எழுச்சி மாநாடு கோவையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தேதி மற்றும் இடங்களை கமல்ஹாசன் விரைவில் அறிவிப்பார் என்றார்.

Next Story