வழிதவறி சென்று சுற்றித்திரிந்த மூதாட்டி குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு அன்னையர் தினத்தில் நெகிழ்ச்சி சம்பவம்


வழிதவறி சென்று சுற்றித்திரிந்த மூதாட்டி குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு அன்னையர் தினத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 14 May 2018 3:45 AM IST (Updated: 14 May 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் காணாமல் போன மூதாட்டி ஞாபகமறதியால் வழிதவறி வேலூருக்கு வந்து சுற்றித்திரிந்தார்.

வேலூர், 

சென்னையில் காணாமல் போன மூதாட்டி ஞாபகமறதியால் வழிதவறி வேலூருக்கு வந்து சுற்றித்திரிந்தார். அவரை போலீசார் மீட்டு அன்னையர் தினமான நேற்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

வேலூர் சத்துவாச்சாரி கிருபானந்தவாரியார் தெருவில் நேற்று முன்தினம் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி வெகுநேரமாக சுற்றித்திரிந்தார். அதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் மூதாட்டியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சரியாக பதில் தெரிவிக்கவில்லை. இதையடுத்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், அவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த அண்ணாமலை மனைவி சீதாலட்சுமி (வயது 65) என்பதும், ஞாபக மறதியால் சென்னையில் இருந்து வேலூருக்கு வழிதவறி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் வேலூரையடுத்த அரியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.

இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கும், கமுதி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கமுதியில் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, வேலூர் சத்துவாச்சாரியில் மீட்கப்பட்ட மூதாட்டி கமுதி கொத்தனார் தெருவை சேர்ந்த அண்ணாமலை மனைவி சீதாலட்சுமி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இவர் ஞாபக மறதியால் வீட்டு முகவரி உள்பட அனைத்து விஷயங்களையும் அடிக்கடி மறந்து விடுவாராம். சீதாலட்சுமி மகன் பெரியசாமி சென்னை செங்குன்றத்தில் மளிகைக்கடை வைத்துள்ளார்.

அவர், புதிய வீடு கட்டி 6-ந்தேதி கிரக பிரவேசம் செய்து குடிபுகுந்தார். இதில் கலந்துகொள்ள சீதாலட்சுமி தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை சென்றார். கிரக பிரவேசம் முடிந்தவுடன் உறவினர்கள் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர்.

சீதாலட்சுமி மட்டும் மகன் வீட்டிலேயே தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி காலை கடைக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்து வெளியே சென்ற சீதாலட்சுமி, அதன்பின்னர் வீடு திரும்பி வரவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கமுதியில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் சென்னை செங்குன்றத்தில் உள்ள அவரது மகன் பெரியசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் உடனடியாக நேற்று முன்தினம் இரவு வேலூருக்கு விரைந்து வந்தனர்.

நேற்று காலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தலைமையில் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார், மூதாட்டி சீதாலட்சுமிக்கு பழங்களை வாங்கி கொடுத்து குடும்பத்தினருக்கு அறிவுரை கூறி அவர்களிடம் ஒப்படைத்தனர்.

காணாமல் போன தாயை கண்டதும், பெரியசாமி மற்றும் குடும்பத்தினர் சந்தோஷமடைந்தனர். சீதாலட்சுமி தனது குடும்பத்தினரை கட்டி தழுவி சந்தோஷத்தில் குழந்தை போல் குழைந்தார். இதனை கண்ட போலீசார் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னையில் காணாமல் போன மூதாட்டி வேலூரில் மீட்கப்பட்டு அன்னையர் தினமான நேற்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் போலீசார் உள்பட அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story