தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை


தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை
x
தினத்தந்தி 13 May 2018 9:45 PM GMT (Updated: 13 May 2018 8:25 PM GMT)

ஜெயலலிதா நடத்திய ஆட்சியைவிட தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #MinisterDindigulSrinivasan

சென்னை, 

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா எனும் மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மலர் கண்காட்சியில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசிய தாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி 1½ வருடத்தை தாண்டி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. நல்ல உள்ளங்கள் அனைவருமே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை பாராட்டி வருகின்றனர். ‘என்னய்யா இது... அம்மா ஆட்சியை விட பயங்கரமா போய்கிட்டு இருக்கு...’, என்று அனைவரும் வியந்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஜெயலலிதா நடத்திய ஆட்சியை விட, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். அவரது ஸ்டைல் வித்தியாசமானது. எங்கு பார்த்தாலும், எந்த டி.வி.யை பார்த்தாலும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி தான் செய்திகள் வருகிறது. இதை செய்தார்கள்... அந்த திட்டத்தை செயல்படுத்தினார்கள்... என்று முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சீரிய செயல்பாடுகள் தான் பேசப்படுகிறது.

காலை 9.45 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி, 10 மணிக்கு முதல்-அமைச்சர் கோட்டைக்கு (தலைமை செயலகம்) வந்துவிடுகிறார். கோட்டைக்கு வந்ததும் தினமும் 10 இலாக்காக்களை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்துகிறார். பணிகளை விரைந்து செய்கிறார். இது எங்களுக்கெல்லாம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

அமைச்சர் பதவிக்கு நான் புதியவன் என்பதால் எனக்கு இதெல்லாம் வியப்பாக இருக்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி நல்ல அனுபவம் கொண்டவர். ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல டிரெயினிங் கொடுத்து சிறப்பாக அவரை செதுக்கி இருக்கிறார்.

இன்றைக்கு பல பேர் முதல்-அமைச்சராக முடியவில்லையே... என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நாளைய முதல்-அமைச்சர் நான் தான் என்று ஒவ்வொருவரும் வேட்டியை கிழித்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் என ஒரு போக்கு இருக்கிறது. ஒரு 10 தலைவர்கள் தான் இதை செய்கிறார்கள். ஆனால் வைகோ, டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் ஒரு அரசியல் அங்கீகாரம் கொடுத்ததே ஜெயலலிதா தான். இப்போது அவர்கள் தனித்தனி தலைவர்களாகி விட்டனர். ஜெயலலிதா இல்லையென்றால், ஒரு கவுன்சிலராக கூட அவர்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது.

இப்போது தினசரி தி.மு.க. தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் அடிக்கடி எதிர்க்கட்சி கூட்டம் நடக்கிறது. எங்கேயாவது ஒரு ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிட நேரமில்லை என்றால், வடை-காப்பியுடன் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். எதையும் நாங்கள் சந்திக்க தயார். எங்களுக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story