அன்னையர் தினத்தில் சோக சம்பவம்: தாய் இறந்த துக்கத்தில் மகன் சாவு ஒரே இடத்தில் உடல்கள் அடக்கம்
சுரண்டையில் தாய் இறந்த துக்கத்தில் மகனும் பரிதாபமாக இறந்தார். அன்னையர் தினமான நேற்று ஒரே இடத்தில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
சுரண்டை,
நெல்லை மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் கமலா மிஷியர் (வயது 69). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-வது மகனான குட்வின் (40) வெளிநாட்டில் கப்பல் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கமலா மிஷியர் இவர் மீது அதிக பாசம் வைத்து இருந்தார். குட்வினும், தாயாரிடம் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குட்வின் விடுமுறையில் ஊருக்கு வந்தார். இந்த நிலையில் கமலா மிஷியருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே நேற்று முன்தினம் நெல்லையில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்துக்கு குட்வின் தனது தாயாரை காரில் அழைத்து சென்றார். அங்கு ஸ்கேன் எடுத்த பிறகு ஊருக்கு புறப்பட தயாரானார்கள்.
அப்போது கமலா மிஷியர் திடீரென மயங்கி விழுந்தார். டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினர்.
பின்னர் கமலா மிஷியர் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. தாயார் உடலை பார்த்து அழுதபடியே குட்வின் இருந்தார். அவர் உடல் சோர்ந்து காணப்பட்டார்.
இதற்கிடையே கமலா மிஷியர் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. திடீரென குட்வின் மயங்கி விழுந்தார். உடனே அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தாய் இறந்த துக்கம் தாங்காமல் குட்வின் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.
தாய்-மகன் இருவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. அன்னையர் தினமான நேற்று தாய்- மகன் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டன.
இறந்த குட்வினுக்கு மனைவியும், 3 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story