கமல்ஹாசன் கூட்டும் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? மு.க.ஸ்டாலின் பதில்


கமல்ஹாசன் கூட்டும் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? மு.க.ஸ்டாலின் பதில்
x
தினத்தந்தி 15 May 2018 5:00 AM IST (Updated: 15 May 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

கமல்ஹாசன் கூட்டும் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? என்பது குறித்து மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து சென்ற பிறகு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் பேசியதாவது:-

காவிரி விவகாரத்தில் ஒரு அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும் என விவசாய சங்கங்கள் தொடர்ந்து குரல் எழுப்பினர். அந்த அடிப்படையில் கமல்ஹாசன் என்னை சந்தித்து, ‘விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று 19-ந்தேதி ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம், நீங்கள் அந்த கூட்டத்துக்கு வரவேண்டும்’, என்று அழைப்பு விடுத்தார்.

நான் அவரிடம், ‘திமுக சார்பில் 9 கட்சிகள் உள்ளடங்கிய ஒரு அனைத்துக்கட்சி கூட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தி வருகிறோம். இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கருத்தில்கொண்டு முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் 17-ந்தேதி ஒரு அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். எனவே அன்றைய கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களிடம் கலந்துபேசி, கமல்ஹாசன் தலைமையில் கூடும் கூட்டத்தில் பங்கேற்கலாமா? வேணாமா? என்பது குறித்து அறிவிக்கிறேன்’, என்று சொல்லியிருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து மு.க. ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நீங்கள் கூட்டும் கூட்டத்தை தொடர்ந்து, கமல்ஹாசனும் ஒரு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற் கான அவசியம்தான் என்ன?

பதில்:- கட்டாயம் அவசியம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் எந்த கட்சி குரல் கொடுத்தாலும் அதில் அவசியம் இருக்கிறது.

கேள்வி:- கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்குமாறு பா.ஜ.க.வுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறதே?

பதில்:- இதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது. நாங்கள் கூட ஏற்கனவே ஆளும்கட்சியான அ.தி.மு.க. வுக்கும் அழைப்பு விடுத்திருக் கிறோம். பா.ஜ.க.வுக்கும் அழைப்பு கொடுத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் புறக்கணித்தனர். எனவே அவர் அழைப்பு விடுத்ததில் எந்தவித தவறும் கிடையாது. எப்படி கேரளா, ஆந்திரா, கர்நாடக போன்ற மாநிலங்களில் எல்லாம் நல்ல விஷயங்களுக்காக அரசியல் வேறுபாடு மறந்து போராடுகிறார்களோ, அதுபோல இந்த காவிரி விவகாரத்தில் எல்லோரும் ஒன்றுசேர்ந்து போராடவேண்டும் என்பது தான் எங்கள் கருத்து.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Next Story