பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: கவர்னரிடம் விசாரணை அறிக்கை தாக்கல் சந்தானம் குழு வழங்கியது
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் ஆர்.சந்தானம் குழு வழங்கியது.
சென்னை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலா தேவி(வயது 47). இவர் தனது கல்லூரியில் படித்த 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த செல்போன் உரையாடல் ‘வாட்ஸ்-அப்பில்’ வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.
இதையடுத்து கல்லூரியில் இருந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் கடந்த மாதம் 16-ந்தேதி கைது செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றிய முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை அமைத்து கடந்த மாதம் 16-ந் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
ஆர்.சந்தானம் விசாரணைக்கு உதவியாக கொடைக் கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி பிரிவு பேராசிரியை டி.கமலி, மதுரை வேளாண்மை கல்லூரி மண்ணியல் மற்றும் சுற்றுசூழலியல் துறை பேராசிரியை எஸ்.தியாகேஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
அவர்களுடன் சேர்ந்து சந்தானம் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினார். இந்தநிலையில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி உள்பட பலரிடம் விசாரிக்க வேண்டும் என்பதற்காக 15 நாட்கள் காலநீட்டிப்பு கேட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் சந்தானம் குழு வேண்டுகோள் விடுத்தது. இதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் இசைவு தெரிவித்தார். இதையடுத்து சந்தானம் குழுவினர் சிறைக்கு சென்று முருகன், கருப்பசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
3 கட்டங்களாக 60-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் திட்டமிட்டபடி ஆர்.சந்தானம் குழுவினர் விசாரணையை முடித்தனர். இதையடுத்து சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று சந்தானம் குழுவினர் சந்தித்து, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.
சந்தானம் குழுவினர் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை வருகிற ஜூன் மாதம் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், ‘இந்த வழக்கு விசாரணை முடியும் முன்பு சந்தானம் குழு அறிக்கை தாக்கல் செய்ய முற்பட்டால் அதை பொதுவெளியில் வெளியிடக் கூடாது. சீலிடப்பட்ட கவரில் வைத்திருக்க வேண்டும்.’ என்று கூறியிருந்தனர்.
அதனடிப்படையில் சந்தானம் குழுவினர் சீலிடப்பட்ட கவரில் கவர்னரிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story