சர்க்கரை மீதான ரூ.3 மேல்வரி விதிப்பு தள்ளிவைப்பு சரக்கு சேவை வரி குழு முடிவு


சர்க்கரை மீதான ரூ.3 மேல்வரி விதிப்பு தள்ளிவைப்பு சரக்கு சேவை வரி குழு முடிவு
x
தினத்தந்தி 15 May 2018 3:45 AM IST (Updated: 15 May 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

சர்க்கரை மீதான ரூ.3 மேல்வரி விதிப்பை தள்ளிவைப்பதாக சரக்கு சேவை வரி குழு முடிவு செய்துள்ளது.

சென்னை, 

சர்க்கரை மீதான ரூ.3 மேல்வரி விதிப்பை தள்ளிவைப்பதாக சரக்கு சேவை வரி குழு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசின் வணிக வரி மற்றும் பதிவுத்துறையின் முதன்மை செயலாளர் கா.பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சர்க்கரை மீது மேல்வரி விதிப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் வணிக வரி மற்றும் பதிவுத்துறையின் அரசு முதன்மை செயலாளர் கா.பாலச்சந்திரன், வணிக வரி ஆணையர் டி.வி.சோமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 4-ந் தேதி நடைபெற்ற 27-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தின் போது சர்க்கரை மீதான 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி தவிர்த்து கிலோ ஒன்றுக்கு ரூ.3 மேல்வரி விதிப்பதற்கான மத்திய அரசின் கருத்துரு விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு மட்டும் இன்றி பிற மாநிலங்களும் சர்க்கரை மீது மேல்வரி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்யும் பொருட்டு ஜி.எஸ்.டி. மன்றமானது அமைச்சர்கள் குழு ஒன்றை அன்றைய தினமே ஏற்படுத்தியது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் சர்க்கரை மீது 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி தவிர்த்து கிலோ ஒன்றுக்கு ரூ.3 மேல்வரி விதிப்பதற்கு அரசியல் சாசன கூறுகள் அனுமதிக்கின்றனவா? என்பது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்தின் கருத்தினை ஜி.எஸ்.டி. மன்ற செயலகமானது பெற்று வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு முன்பு இருந்த சர்க்கரை வளர்ச்சி நிதியில் வசூலிக்கப்பட்ட தொகை மற்றும் எந்தெந்த காரணத்திற்காக, எந்தெந்த மாநிலத்திற்காக, எவ்வளவு நிதி வழங்கப்பட்டது குறித்த விவரத்தினையும் மத்திய அரசின் நுகர்வோர் நடவடிக்கைகள், உணவு மற்றும் பொது விநியோக துறையிடமிருந்து ஜி.எஸ்.டி. மன்ற செயலகமானது பெற்று இக்குழுவிற்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த விவரங்களின் அடிப்படையில், சர்க்கரை மீது மேல்வரி விதிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அமைச்சர்கள் குழுவின் அடுத்த கூட்டத்தினை ஜூன் 3-ந் தேதி நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story