எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை என்றால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு போலீஸ் கமிஷனரை, எச்சரிக்கை செய்து வக்கீல் நோட்டீஸ்


எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை என்றால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு போலீஸ் கமிஷனரை, எச்சரிக்கை செய்து வக்கீல் நோட்டீஸ்
x
தினத்தந்தி 15 May 2018 3:15 AM IST (Updated: 15 May 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

பெண் பத்திரிகையாளரை அவதூறு செய்த வழக்கில் தேடப்படும் எஸ்.வி.சேகரை 7 நாட்களுக்குள் கைது செய்யவில்லை என்றால், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனருக்கு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை, 

பெண் பத்திரிகையாளரை அவதூறு செய்த வழக்கில் தேடப்படும் எஸ்.வி.சேகரை 7 நாட்களுக்குள் கைது செய்யவில்லை என்றால், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனருக்கு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர், கடந்த மாதம் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. எஸ்.வி.சேகர் மீது போலீசில் பத்திரிகையாளர் மிதார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தனக்கு முன்ஜாமீன் வழங்ககோரி சென்னை ஐகோர்ட்டில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை பெண் நீதிபதி எஸ்.ராமதிலகம் விசாரித்து, சட்டம் எல்லோருக்கும் பொதுவானது தான். ஒரு வழக்கில் சாதாரண மனிதன் மீது போலீசார் எப்படி நடவடிக்கை எடுப்பார்களோ, அதுபோல இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை நீதிபதி கடந்த 10-ந்தேதி பிறப்பித்தார். ஆனால், இதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை சார்பில் வக்கீல் டி.அருண், சென்னை போலீஸ் கமிஷனருக்கும், சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டருக்கும் கோர்ட்டு அவமதிப்பு நோட்டீசை நேற்று அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது:-

ஐகோர்ட்டு உத்தரவிட்டும், எஸ்.வி.சேகரை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐகோர்ட்டின் உத்தரவை நீங்கள் (போலீஸ் கமிஷனர், இன்ஸ்பெக்டர்) கேலிக் கூத்து ஆக்கியுள்ளர்கள்.

அதேநேரம், கடந்த 12-ந்தேதி சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன், எஸ்.வி.சேகர் கலந்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இது நீதித்துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக உள்ளது. போலீசாரின் இந்த செயல், கோர்ட்டை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, நீதித்துறையின் உத்தரவுக்கு உள்ள கம்பீரத்தின் மீது தாக்குதல் நடத்துவது போலவும் உள்ளது.

எனவே, இந்த நோட்டீஸ் கிடைத்து 7 நாட்களுக்குள், ஐகோர்ட்டின் உத்தரவின்படி, எஸ்.வி.சேகரை கைது செய்து சம்பந்தப்பட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கவேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், உங்கள் (போலீஸ் கமிஷனர், இன்ஸ்பெக்டர்) மீது என் கட்சிக்காரர் கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story