காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழுவுக்கு முழு அதிகாரம் அளிக்க வேண்டும் வேலூரில், அய்யாக்கண்ணு பேட்டி
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழுவிற்கு முழு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று வேலூரில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.
வேலூர்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழுவிற்கு முழு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று வேலூரில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு. இவர் மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக்கோரி கடந்த மார்ச் மாதம் 1–ந் தேதி கன்னியாகுமரியில் 100 நாட்கள் விழிப்புணர்வு பயணம் தொடங்கினார். இந்த நிலையில் 75–வது நாளான நேற்று அவர் வேலூருக்கு வந்தார். வேலூர் கோட்டை அருகே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அய்யாக்கண்ணு வழங்கினார்.
பின்னர், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும், பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும், ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் ராமனிடம் கொடுக்க, சங்க நிர்வாகிகளுடன் அய்யாக்கண்ணு வருகை தந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தென்பெண்ணை ஆற்றில் இருந்து வீணாகும் தண்ணீரை பாலாற்றில் திருப்பி விட வேண்டும். பாலாற்றில் சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். மேலும் பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும்.
பிரதமர் மோடியை விமர்சிப்பதாக கூறி சக்தி சேனா அமைப்பினர் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பிரதமர் குறித்து தவறாக எந்த ஒரு வார்த்தையும் நான் பேசவில்லை. விவசாய பொருட்களுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும் என்று தான் கோரிக்கை விடுக்கிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பிரதமரிடம் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உள்ளது. பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 10 பேர் கொண்ட குழு அமைக்க இன்று (அதாவது நேற்று) வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த குழுவிற்கு காவிரி விவகாரத்தில் முழு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அதிகாரமற்ற குழு என்றால் தேவையில்லை.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய நீர்வளத்துறை செயலாளர் மற்றும் கர்நாடக தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோரை கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கைது செய்து ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். காவிரியில் தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு முன்பாக படுத்து விவசாயிகள் போராட்டம் நடத்துவோம். இந்த போராட்டத்திற்கு தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அழைப்போம். முதல்–அமைச்சர் வரவில்லை என்றாலும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அய்யாக்கண்ணுவை தாக்க முயற்சி
கலெக்டரிடம் அய்யாக்கண்ணு மனு அளிக்க வந்த சமயம், ஏற்கனவே கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு வந்த சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர் திடீரென அய்யாக்கண்ணுவிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்கள் அய்யாக்கண்ணுவிடம் ‘மோடியை பற்றி விமர்சிக்க உனக்கு தகுதியில்லை, விவசாய சங்கத்திற்கு நீ தலைவனாக இருப்பதற்கும் தகுதியில்லை’ என்று ஒருமையில் பேசினர்.
இதனால் அய்யாக்கண்ணுவுக்கும், இந்து அமைப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர் அய்யாக்கண்ணுவை தாக்க முயற்சித்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, மோதலை தடுத்து அய்யாக்கண்ணுவை மீட்டனர். இது பற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், என் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்த முயற்சி நடக்கிறது என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து அவர் கலெக்டரிடம் மனு அளித்தார். அப்போது சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் வாக்குவாத்தில் ஈடுபட்டதையும், தாக்க முயற்சி செய்ததும் குறித்தும் கலெக்டரிடம் கூறினார். கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story